Apr 08, 2020 11:55 AM

சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய ‘டிக்கிலோனா’ தயாரிப்பாளர் சினிஷ்!

சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய ‘டிக்கிலோனா’ தயாரிப்பாளர் சினிஷ்!

கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில், சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு சினிமா பிரபலங்கள் பலர் பணமாகவும், பொருளாகவும் உதவி செய்து வருகிறார்கள்.

 

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேய, கார்த்தி, தயாரிப்பாளர் பெப்ஸி சிவா, நடிகரும் இயக்குநருமான கணேஷ் பாபு, நடிகை குட்டி பத்மினி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், பெப்ஸி அமைப்பு என பலர் இதுவரை நன்கொடை வழங்கியுள்ள நிலையில்,ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பலூன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சினிஷ், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு இன்று நன்கொடை வழங்கியுள்ளார்.

 

‘பலூன்’ படத்திற்கு பிறகு தனது புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்ட சினிஷ், ‘சோல்ஜர்ஸ் பேக்டரி’ (Soldiers factory) என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் வெப் சீரிஸ்களை தயாரித்தார். அந்த வகையில், அவர் தயாரித்த ‘டாப்லெஸ்’ என்ற வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

 

மேலும், சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் சினிஷ், அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு வருவதால், படம் இயக்குவதை சற்று தள்ளி வைத்திருப்பவர், விரைவில் முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறார். 

 

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் கடினமான சூழலை அறிந்து பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பெப்ஸி அமைக்கு 100 மூட்டை அரிசியை நன்கொடையாக வழங்கியிருக்கும் சினிஷ், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கும் மற்றொரு சினிமா நிருபர்கள் சங்கத்திற்கும் தலா 50 மூட்டை அரிசியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

 

இயக்குநரும் தயாரிப்பாளருமான சினிஷின் இத்தகைய உதவிக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.