’ராஜா சாப்’ திரைப்பட விமர்சனம்
Casting : Prabhas, Sanjay Dutt, Boman Irani, Malavika Mohanan, Nidhhi Agerwal, Riddhi Kumar, Zarina Wahab
Directed By : Maruthi
Music By : Thaman S
Produced By : People Media Factory, IVY Entertainment - TG Vishwa Prasad, Krithi Prasad
பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது தாத்தாவை தேடி செல்லும் நாயகன் பிரபாஸ், பல்வேறு மாய வித்தைகளை கற்று தேர்ந்த பயங்கரமான மந்திரவாதி சஞ்சய் தத், தான் தனது தாத்தா என்பதை தெரிந்துக் கொள்கிறார். அதே சமயம் தனது தாத்தாவை நெருங்க முயற்சிக்கும் அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருவதோடு, தாத்தாவுடன் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஏன் இந்த மோதல் ? , இதனால் பிரபாஸின் வாழ்வில் எத்தகைய சிக்கல்கள் ஏற்படுகிறது, அதில் இருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதை திகில், ஃபேண்டஸி உள்ளிட்ட அனைத்துவிதமான மசாலாவையும் கலந்து கொடுத்திருப்பதே ‘ராஜா சாப்’.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான முயற்சியாக பல பிரமாண்டமான ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த பிரபாஸ், அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதால், மீண்டும் தனது பழைய பாணியிலான மசாலாப் படத்தில் நடிக்க முடிவு செய்து இதில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தின் மூலமாகவும் அவர் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கிறார். அதிலும், கதையே இல்லாத படத்தில் அவர் நடிக்கவே தெரியாதவர் போல, ஏனோ தானோ என்று நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் எடுபடமால் போயிருப்பதோடு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு வேகத்தடை போலவும் அமைந்திருக்கிறது.
மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், ஒருவருக்கு கூட அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. மூன்று பேரையும் பேய் வீட்டில் அடைத்து வைத்து, பாடல் காட்சிகளுக்காகவும், செட் பிராப்பர்ட்டியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பிரபாஸின் தாத்தாவாக நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் பாட்டியாக நடித்திருக்கும் சரினா வாகப் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருந்தாலும், அவர்களது திரை இருப்பு படத்திற்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை. பொம்மன் இரானியும் வந்து போகிறார்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. வி.எப்.எக்ஸ் காட்சிகள் தரமற்றதாக இருந்தாலும், அவற்றை காட்சிகளுடன் இணைத்து, படத்தை கலர்புல்லாக கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டும்படி உள்ளது.
தமன்.எஸ் இசையில் பாடல்கள் கமர்சியல் அம்சங்களோடு கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையின் சத்தம் காதை கிழிக்கும் வகையில் உள்ளது.
பழைய பாணியிலான கதை, மெதுவாக நகரும் திரைக்கதை, தேவையில்லாத காட்சிகள் என படத்தில் நீக்கப்பட வேண்டிய விசயங்கள் பல இருந்தாலும், மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நீளம் வரும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவுக்கு பாவ மன்னிப்பே கிடையாது.
எழுதி இயக்கியிருக்கும் மாருதி, தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து உடல் வலியால் சோர்வடைந்திருக்கும் பிரபாஸுக்கு, மூன்று நாயகிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கும் வேலையை செய்திருக்கிறார்.
காதல், காமெடி, கவர்ச்சி, திகில், கற்பனை என்று கமர்ஷியல் படங்களுக்கு தேவையான அனைத்து விசயங்களும் படத்தில் இருந்தாலும், அவை எதுவுமே ரசிக்கும்படி இல்லாதது படத்திற்கு பெரும் பலவீனம்.
மொத்தத்தில், ‘ராஜா சாப்’ ரசிக்க தகுதியற்றவர்.
ரேட்டிங் 2.7/5

