Jan 29, 2021 10:12 AM

அரசு டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வர வேண்டும் - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கோரிக்கை

அரசு டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வர வேண்டும் - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கோரிக்கை

திரையுலக வளர்ச்சிக்காக அரசு டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வர வேண்டும், என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ‘சில்லு வண்டுகள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சரண்யா 3டி ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் ‘சில்லு வண்டுகள்’. குழந்தை நட்சத்திரங்களை வைத்து சுரேஷ் கெ.வெங்கிடி இயக்கியுள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “மாஸ்டர் படம் இவ்வளவு வசூல் பண்ணியது என்று யாருக்காவது தெரியுமா? தியேட்டர்காரர்கள் சரியான கணக்கை தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் இதை அரசாங்கம் நினைத்தால் சரி செய்ய முடியும். ஒரே சர்வரை வைத்து டிக்கெட் விற்பனையை மானிட்டரிங் செய்ய முடியும். எது நல்ல திரைப்படம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். திரையுலகின் வளர்ச்சிக்காக அரசாங்கம் டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வரவேண்டும் என்று இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மூலமாக கேட்டுக்கொள்கிறேன். தயாரிப்பாளரை காப்பாற்றும் சினிமா தான் நல்ல சினிமா. இந்தப்படம் தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை வைத்து அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். அதுக்கு எவ்வளவு போராடியிருப்பார்கள். இந்தக் குழந்தைகள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

இசையமைப்பாளர் தேவா பேசுகையில், “இந்தப்படத்திற்கு இசை அமைத்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் சுரேஷ் என்னிடம் வந்து கதை சொன்னது அவ்வளவு அழகாக இருந்தது. என்ன கதை சொன்னாரோ அதை அப்படியே எடுத்திருக்கிறார். குழந்தைகள் எல்லாம் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் தான் பாடல்கள் நன்றாக அமையும். இப்படத்தின் தயாரிப்பாளர் நாராயணன் அவர்கள் பேசி இன்று தான் பார்த்துள்ளேன். நானும் ஆர்.வி உதயகுமாரும் பணியாற்றிய ஒரு படத்தின் தயாரிப்பாளர் பெரும் பணக்காரர் தான். இருந்தும் அந்தப்படம் வெளியாகவே இல்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் நாராயணன் படத்தை நல்லபடியாக முடித்து வெளியீடு வரைக்கும் கொண்டு வந்துவிட்டார். அவருக்கு என் வாழ்த்துகள். இயக்குநர் சுரேஷ் அவர்களும் தயாரிப்பாளர் நாராயணம் அவர்களும் இந்தப்படம் போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை நிறைய கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “"இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் வந்ததிற்கான முக்கியக்காரணம் இந்தப்படத்தை குழந்தைகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்காக ஒருபடம் என்பது இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது. நமது அரசாங்கம் குழந்தைகளுக்கான படம் எடுத்தால் சில சலுகைகளை கொடுக்க வேண்டும். தமிழில் பெயர் வைத்தால் மானியம் கொடுப்பது போல இதற்கும் எதாவது செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு படிப்பை விட ஒழுக்கம் மிக முக்கியம். காமராஜர் பெரிதாகப்படிக்கவில்லை ஆனால் இன்றுவரை கக்கனையும், காமராஜரையும் பேசுகிறோம்.காரணம் அவர்களின் ஒழுக்கம் தான். அதுபோல் குழந்தைகள் இருக்க வேண்டும். மாதா,பிதா குரு, தெய்வம் என்பதையும் மறக்கக் கூடாது. இப்படி இருந்தாலே வாழ்வில் ஜெயித்துவிடலாம். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நாராயணன் நடிகராகவும் வெற்றிபெற வேண்டும். தேவா அன்று எப்படி இருந்தாரோ அதேபோல் தான் அன்பிலும் பண்பிலும் இன்றும் இருக்கிறார். அவர் சின்னபடம் பெரியபடம் என்று இசை அமைக்க மாட்டார். அவருக்கு எல்லாப்படங்களும் ஒன்று தான். இன்று இந்த இசை நிகழ்ச்சியை நெட்டில் பார்க்கும் அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னார்கள். ஆனால் ஸ்கிரீனில் படத்தைப் பார்க்கும் போது அப்படித் தெரியவில்லை. ரொம்ப அழகாக எடுத்திருக்கிறார்கள்.” என்றார்.