Nov 22, 2025 04:56 AM

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார். 

 

அதிகமான சம்பளம், தான் சொல்லும் இசையமைப்பாளரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனை, தான் விரும்பும் நாயகி என்று தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கும் செயலில் ஈடுபட்டவர் தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். ஆம், ‘பிளடி பெக்கர்’ படத்தில் ஆரம்பித்த அவரது சறுக்கல் ‘கிஸ்’ படத்தை யடுத்து  நேற்று வெளியான ‘மாஸ்க்’ படத்திலும் தொடர்கிறது.

 

அறிமுக இயக்குநர் விகாமன் அசோக் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா, எஸ்.பி.சொக்கலிங்கம், விபின் அக்னிகோத்ரி ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். படத்தை தயாரித்ததோடு எதிர்மறை நாயகியாகவும் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

 

ஆரம்பத்தில் இருந்தே படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்பது தெரியாமல் திணறிய படக்குழு, எப்போதும் போல் டிவிட்டர் வாசிகளை நம்பிக்கொண்டிருந்தது. டிவிட்டர் விளம்பரம் வெட்டி வேலை, வீணாப்போகும் பணம், என்பதை நிரூபிப்பது போல், படம் வெளியான முதல் நாள் பல திரையரங்கங்களில் 10 பேர் கூட இல்லை என்ற தகவல் வெளியானது. சில திரையரங்குகளில் ஆட்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போதாது என்று படம் பார்த்த சொற்ப ரசிகர்களும் படம் சரியில்லை என்று வீடியோ விமர்சனங்கள் வெளியிட்டதோடு, படத்தின் பாதியிலேயே வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

முதல் நாளிலேயே நெகட்டிவான விமர்சனங்களை பெற்றாலும், பத்திரிகையாளர்கள் காட்சிக்குப் பிறகு வெளியாகும் விமர்சனங்களால் படம் தலை தூக்கிவிடும் என்று நினைத்த தயாரிப்பு தரப்புக்கு அங்கேயும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம், வாரத்திற்கு சுமார் 6 முதல் 8 படங்கள் வெளியாகும் தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி, படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாட்களில் திரையிடுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால், ‘மாஸ்க்’ பட பி.ஆர்.ஓ, யார் எப்படி போனால் என்ன ?, படம் என்ன ஆனால் எனக்கென்ன ? என்ற  எண்ணத்தில் படம் வெளியான அன்று மாலை 3 மணிக்கு தான் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

 

படம் ஏற்கனவே சரியில்லாதது ஒரு பக்கம், பி.ஆர்.ஓ-வின் அலட்சியம் ஒரு பக்கம் என்று அனைத்தும் சேர்ந்து ‘மாஸ்க்’ படத்தை ஒரு வழியாக்கி விட்டது. தற்போது வெளியாகும் பத்திரிகையாளர்கள் விமர்சனங்களில் ‘மாஸ்க்’ படத்தின் உண்மைத்தன்மை வெளியாக தியேட்டருக்கு வந்த அந்த 10 பேர் கூட்டம் கூட இனி வராத நிலை ஏற்பட்டுள்ளது.