கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
                அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்.சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் இராஜ் பி.ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’45 தி மூவி’. சுரஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம்.ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தின், முதல் பார்வை போஸ்டர், க்ளிம்ப்ஸ்கள் உள்ளிட்ட படம் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ’45 தி மூவி’ படக்குழு சமீபத்தில் வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு,ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் பாடல்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
வனப்பகுதி சூழலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த பாடலில், நடிகர் ராஜ் பி.ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்த, தப்பிப்பதற்காக ஓடும் அவர், ஒரு பள்ளத்தில் விழுகிறார். பிறகு அங்கு வரும் ஆப்பிரிக்க பழங்குடி சிறுவர்கள் அவருக்கு உதவி செய்வதோடு, அவருடைய உடையை மாற்றிவிடுகிறார்கள். இதையடுத்து அந்த இடத்தில் அதிரடியாக அறிமுகமாகிறார்கள் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா.
இப்பாடலில் வரிகளை எழுதி பாடியிருப்பவர் சென்னையை சேர்ந்த கானா பாடல் கலைஞர் கானா சுதாகர். பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும், கேட்க வைக்கும் விதத்தில் அர்ஜுன் ஜன்யாவின் இசை அமைந்துள்ளது. இசை மற்றும் வரிகளோடு, ஜானி மாஸ்டர் நடன அமைப்பில் ஆப்பிரிக்க சிறுவர்களின் அதிரடியான நடனம் மற்றும் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி ஆகியோரது ஸ்டைலிஷான நடனம் என ஒட்டு மொத்தமாக “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) உற்சாகமூட்டும் பாடலாக ரசிகர்களை பரவசமடைய செய்துள்ளது.
கதை எழுதி இயக்கியிருக்கும் அர்ஜுன் தன்யா, இன்றைய தலைமுறைக்கு ஏற்ப இசையமைத்து பாடல்களை திரும்ப திரும்ப கேட்க வைத்திருக்கிறார்.
’45 தி மூவி’ படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, படம் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

