Feb 09, 2021 06:57 PM

‘கமலி From நடுக்காவேரி’ என் வாழ்க்கையில் முக்கியமான படம்! - ஆனந்தி பெருமிதம்

‘கமலி From நடுக்காவேரி’ என் வாழ்க்கையில் முக்கியமான படம்! -  ஆனந்தி பெருமிதம்

’கயல்’ ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கமலி From நடுக்காவேரி’. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தை அபுண்டு ஸ்டூடியோஸ் சார்பில் துரைசாமி தயாரித்துள்ளார். வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

 

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ‘கயல்’ ஆனந்தி படம் குறித்து பேசுகையில், “என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் ராஜசேகர் பேசுகையில், “நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம். என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி தான். நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம் தான் இப்படத்தின் கருவாக தோன்றியது. நாயகி படமாக எடுத்தால் தான் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்? மகளாக எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு கட்சியை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார்.

 

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.

 

இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம். கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முறையிலேயே நடித்துக் கொடுத்தார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி.

 

பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார்.” என்றார்.

 

Kayal Anandi

 

தயாரிப்பாளர் துரைசாமி பேசுகையில், “ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார்.” என்றார்.