இளையராஜாவுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்!

10 ஆண்டுகளாக எந்த படத்திலும் பாடாமல், வந்த வாய்ப்புகளை நிராகரித்து வந்த பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜாவுக்காக மீண்டும் பாடியுள்ளார்.
எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடிக்க, வில்லியாக சங்கீதா நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட், யோகிபாபு, கஸ்தூரி ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மன மாஸ்டர் பிரணவ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெறும் புரட்சிக்கரமான பாடல் ஒன்றை, பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். இப்பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படத்தில் பாடியதோடு, பாடுவதை நிறுத்திய கே.ஜே.ஜேசுதாஸ், தற்போது இளையராஜாவுக்காக ‘தமிழரசன்’ படத்தில் இந்த பாடலை பாடியிருக்கிறார்.
ஜெயராம் எழுதிய ”பொறுத்தது போதும்...பொங்கிட வேணும்....புயலென வா...”என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் இனிதே பதிவானது.
இந்த பாடல் ஒலிப்பதிவுக்காக வந்த கே.ஜே.ஜேசுதாஸுக்கு இளையராஜாவும், படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இரண்டு கட்டமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.