Feb 19, 2026 05:47 PM

’லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ திரைப்பட விமர்சனம்

48663bca9aefd16370c9b1d3307a37db.jpg

Casting : Aadhav Krishna, Simran, Badava Gopi, Vinodhini, Jawa Sundaresan, Rohit, Dhananjeyan, Muthu Buvan

Directed By : R.Mahalakshmi Murugan

Music By : Ashwamithra

Produced By : JB Films, Jones Presents - P. Raghu

 

தாய் இல்லாமல் தந்தை அரவணைப்பில் வளரும் நாயகி சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆதவ் கிருஷ்ணாவை காதலிக்கிறார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனின் காதலை முதலில் நிராகரித்தாலும், அவரது உண்மையான அன்பை புரிந்துக் கொண்டு அவரும் காதலிக்க தொடங்குகிறார். இதற்கிடையே, ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோரை சந்தித்து, தங்களது காதலுக்கு சம்மதம் பெறும் சிம்ரன், தன்னையும், தனது தந்தையையும் விட்டு பிரிந்து சென்ற தனது தாயை சந்தித்து, தனது காதல் பற்றி தெரிவிக்க விரும்புகிறார்.

 

அதன்படி, ஆதவ் கிருஷ்ணாவும், சிம்ரனும் காசிக்கு செல்கிறார்கள். அங்கு தன் அம்மாவை சந்தித்து காதல் பற்றி தெரிவிக்கும் சிம்ரனுக்கு காதலனை பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மறுபக்கம் மாயமான காதலியை தேடும் ஆதவ் கிருஷ்ணாவும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். இவர்களது பிரிவின் பின்னணி என்ன?, பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா, நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன், புத்துணர்ச்சியோடும், துடிதுடிப்போடும் நடித்து கவனம் ஈர்க்கிறார். காதலனிடம் மட்டும் இன்றி, அவரது பெற்றோரிடத்திலும் தன் காதலை விவரித்து சம்மதம் பெறுபவர், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தன் காதல் மீதும், காதலர் மீதும் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை அழுத்தமாக வெளிக்காட்டியிருக்கிறார். 

 

நாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்திருந்தாலும், அவர்களது கதாபாத்திரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

 

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர், ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசியை இயல்பாக படமாக்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் காதல் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

காதல் கதை என்றாலும், அதனுள் இருக்கும் திருப்பங்களை மிக சரியாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக  நகர்த்திச் சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி.

 

அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனம் தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் காதலை கமர்ஷியலாக சொன்னாலும், உண்மையான காதல் மற்றும் அதன் வலியை உணர்த்தியிருக்கிறது.

 

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்‌ஷ்மி முருகன், காதல் கதை என்றாலும், தாய் - மகள் உறவு, குடும்ப உறவு ஆகியவற்றை பின்னணியாக கொண்டு நேர்மையான படத்தை கொடுத்திருக்கிறார்.

 

தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் காதலை முதல் பாதியில் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் காதல் பிரிவு, அதனால் ஏற்படும் வலி, காதலர்களின் மனவலிமை ஆகியவற்றை திரைக்கதையின் முக்கிய அம்சமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆர்.மகாலக்‌ஷ்மி முருகன், அதை அழுத்தமாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்லியிருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.

 

இருப்பினும், காதல் காட்சிகளில் அத்துமீறாமல் நாகரீகமாக காட்சிகளை கையாண்டிருப்பதோடு, காதல் என்பது இருவர் மனம் சம்மந்தப்பட்டது அல்ல, அது ஒட்டுமொத்த குடும்பம் தொடர்புடையது என்ற விசயத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த காதல் படத்தை தாராளமாக ஷேர் & சப்ஸ்கிரைப் செய்யலாம்.

 

மொத்தத்தில், ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ படம் லைக் பண்ண வைக்கும்.

 

ரேட்டிங் 3/5