Jun 29, 2018 06:15 PM

டொரெண்டோ திரைப்பட விழாவில் விருது வென்ற ‘குரங்கு பொம்மை’

டொரெண்டோ திரைப்பட விழாவில் விருது வென்ற ‘குரங்கு பொம்மை’

அறிமுக இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் விதார்த், இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் டொரெண்டோ திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதை வென்றுள்ளது.

 

கனடாவின் முக்கிய பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றான புளூ சபையர் (BLUE SAPPHIRE) என்ற அமைப்பு மூலம், ‘டொரெண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்’ என்ற தலைப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில், கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் விக்ரம் வேதா, அருவி, அறம் என பல வெற்றிப் படங்கள் இடம்பெற்று கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற  விருதினை ’குரங்கு பொம்மை’ திரைப்படம் வென்றுள்ளது. மேலும், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது பாரதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.