Nov 08, 2019 05:52 AM

பிரபலங்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’! - 125 திரையரங்குகளில் ரிலீஸ்

பிரபலங்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’! - 125 திரையரங்குகளில் ரிலீஸ்

‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’ ஆகியப் படங்களை தயாரித்தவரும், சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தை தயாரித்து வருபவருமான சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.

 

பெண்களை மையப்படுத்தி, குறிப்பாக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட சினிமா ஜாம்பவாங்கள் வெகுவாக பாராட்டிய நிலையில், கடந்த வாரம் படம் பார்த்த பத்திரிகையாளர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

 

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, இப்படம் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் அதிகமான திரையரங்குகளில் வெளியாக வேண்டும், என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அதன்படி, இப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 125 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று (நவ.8) வெளியாகியுள்ளது.

 

நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இப்படத்தை பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்பதற்காக ரவீந்தர், பல வகையில் போராட்டம் நடத்தியுள்ளார். தன்னிடம் பெரிய படங்கள் இருந்தாலும், அவற்றைப் போல ‘மிக மிக அவசரம்’ படத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்து வரும் ரவீந்திரனின் முயற்சியால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெளியாகியுள்ளது.

 

இதுவரை சினிமா பிரபலங்களும், ஊடகங்களும் கொண்டாடிய இப்படத்தை, இனி ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

மேலும், இப்படத்திற்கு பிறகு தமிழக காவல் துறையில் சில மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண் காவலர்கள் மீது அரசு தணி அக்கறை செலுத்தும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.