Nov 11, 2025 03:45 AM

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘சிக்மா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும்  அச்சமற்ற ஒருவனின் கதையை ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஜானரில் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் திட்டமிட்டபடி நான்கு மாதங்களில் இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு நிறைவு செய்துள்ளார்.  

 

இது குறித்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி தமிழ் குமரன் கூறுகையில், “இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பட்ஜெட்டிற்குள்ளும் படமாக்குவது தான் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் கனவு. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95 சதவீத படப்பிடிப்பை முடிப்பது என்பது நிச்சயம் புதுமுக இயக்குநராக ஜேசன் சஞ்சயின் சாதனை. லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவரது எதிர்காலத்திற்கும் வாழ்த்துகிறோம்” என்றார்.

 

இயக்குநர் ஜேசன் சஞ்சாய் கூறுகையில், “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத ஒருவன், தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். இவர்களின் திறமை மற்றும் ஆதரவால் தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விடும்.” என்றார்.

 

தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் மற்றும் கதையின் சாகசத்திற்கு ஏற்ற சிறப்பு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.  

 

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய, பெஞ்சமின்.எம் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.