Apr 11, 2020 10:13 AM

ஆன்லைனில் நடிப்பு வகுப்பு! - அறிமுக நடிகையின் அசத்தல் ஐடியா

ஆன்லைனில் நடிப்பு வகுப்பு! - அறிமுக நடிகையின் அசத்தல் ஐடியா

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது மக்களுக்கு பழக்கம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் மிக மிக தேவையான ஒன்றாக இருக்கிறது. அதே சமயம், இதனால் பலர் பாதிக்கப்பட்டாலும், இந்த ஊரடங்கு நாட்களை உபயோகமான நாட்களாக மாற்றுவதற்கான வழிமுறைகளை பலர் கூறி வருகிறார்கள்.

 

அந்த வகையில், யோகி பாபுவின் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகும் ஒரு படம், என இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ராஷ்மி கோபிநாத், மக்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை சொல்வதோடும், விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவதோடும் நின்றுவிடாமல், நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆன்லைன் மூலம் சில நடிப்பு வகுப்புகளில் பங்கேற்று வருகிறாராம்.

 

இது குறித்து ராஷ்மி கோபிநாத்திடமே கேட்ட போது, ”இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கிறது. அதனால் தயவுசெய்து வீட்டேலேயே இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுத்த  வேண்டாம். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் அரட்டை அடிக்க, பார்ட்டிக்கு செல்ல என  வீட்டைவிட்டு எதற்காகவும் அநாவசியமாக வெளியே செல்லவேண்டாம். அப்படி செய்தால் அது நம் அனைவரையுமே கடுமையாக பாதிக்கும்.

 

இந்த சமயத்தில் நான் எனது நேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறேன் தெரியுமா..? என்னைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்... எனது உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறேன். உடற்பயிற்சி செய்வதிலும்,  கேக் செய்வதிலும், சுத்தம் செய்வதிலும், இதற்கு முன்பு பார்க்க எனக்கு நேரமில்லாத நிறைய திரைப்படங்களை பார்ப்பது, படிப்பது, ஆன்லைனில் ஒரு சில நடிப்பு வகுப்புகளை எடுத்துக்கொள்வது மற்றும் நிறைய தூங்குவது என எனது நேரத்தை பயன்படுத்தி கொள்கிறேன்.

 

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வது என்றாலும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கான மாஸ்க்கை நீங்களே தயார்செய்துகொள்ள முடியும்.. எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மாஸ்க்குகளை என் அம்மா தான் வீட்டிலேயே தயார் செய்தார்.

 

இந்த ஊரடங்கு முடிந்த பிறகும் நீங்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் இல்லையா..? உங்கள் முகத்தை மறைக்க துப்பட்டா அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்..

 

தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்காக மாஸ்க்குகளை கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். ஏனென்றால் நம்மை விட அதிகமாக அவர்களுக்குத்தான் தேவைப்படும். அவர்கள் அனைவரும் நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்.

 

பாதுகாப்பாக இருங்கள். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள். நாம்  அனைவரும் நேர்மறை கருத்துக்களுடன்  ஒன்றாக இணைந்து இந்த வைரஸை விரட்டியடிப்போம்.” என்று கூறுகிறார்.