மழையில் பாதித்தவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பி.டி.செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
சமீபத்தில் சுமார் 50 ஏழை பெண்களுக்கு ஆட்டோ வழங்கி உதவி செய்தவர், தற்போது டிட்வா புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற, சாலையோரத்தில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்கிற ஏழை எளிய மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதற்கான நிகழ்வு, 1.12.2025 திங்கள் கிழமையன்று சென்னை முழுவதும் சிறிது நேரம் கூட விடாமல் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கோயம்பேட்டில் நடந்தது.
10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு காய்கறி வியாபாரம் செய்வதற்கான தள்ளுவண்டிகள், நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கு ராட்சத குடைகள், பாய்கள், 200 பேருக்கு ரெய்ன் கோட்டுகள், போர்வைகள் என 500 பேருக்கு பலவித பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்ற பி டி செல்வகுமார், அந்த மக்கள் பயன்பெறும் வகையில் , ஏராளமான மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தார்.

கோயம்பேட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பி டி செல்வகுமார், ”மழைக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் மழை பெய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் செய்வதே சரியாக இருக்கும். மழையெல்லாம் ஓய்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து செய்வது பயனுள்ளதாக இருக்காது. அதனால்தான் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மழைக்கால நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து செய்யும்.” என்றார்.
'கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதை வைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா?' என்ற கேள்விக்கு,
''இப்போகூட பாருங்க. இந்தளவு கொட்டுற மழையில யாராச்சும் ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்காங்களா? இல்லையே. ஆனா, நாங்க எதையும் பொருட்படுத்தாம இறங்கி சேவை செய்றோம். அப்படியெல்லாம் மக்களைப் பத்தி யோசிச்சு செயல்படுற நான் தேர்தல்ல போட்டியிட ஆசைப்படுறதுல தப்பில்லையே?
நாங்க இந்த மாதிரியான மக்களுக்கான சேவைகளை இன்னைக்கு நேத்து செய்யல. பத்து வருஷமா செய்துக்கிட்டிருக்கோம். அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறை, கலையரங்கம்னு கட்டிக் கொடுத்திருக்கோம். கஜா புயல் காலத்துல, கொரோனா காலகட்டத்துலன்னு பார்த்துப் பார்த்து மக்கள் சேவை செய்திருக்கோம். போன மாசம் பெண் ஆட்டோ ஒட்டுநர்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வாங்கிக் கொடுத்தோம். மக்களுக்கு சேவை செய்ற எத்தனையோ பேருக்கு முன்னுதாரணமா இருக்கோம். அதையெல்லாம் பார்த்து அவங்க பிரதிநிதியா என்னை தேர்ந்தெடுத்தா இதே சமூக சேவையை இன்னும் நல்லா செய்யலாம்'' என்றார்.
'நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் சேர்ந்திருக்கிறாரே? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு ''அவருக்கு 80 வயசு நெருங்குது. இந்த வயசுல அவரு என்னத்த செய்யப் போறாரு? விஜய் இதுவரை நடந்த ஆட்சிகளுக்கு மாற்றா, ஊழல் இல்லாத, சுத்தமான ஆட்சி நடத்த வர்றோம்னு சொல்றாரு. அப்படியிருக்கிறப்போ ஊழல் வழக்குல தண்டிக்கப்பட்ட செங்கோட்டையனை கட்சில சேர்த்திருக்கிறது சரியான அணுகுமுறையில்லைன்னு சொல்வேன். ஆதவ் அர்ஜுனாவும் குற்றச் செயல்கள்ல ஈடுபட்டவர்தான். அவரை மாதிரியான ஆட்களை கூட வெச்சுக்கிட்டா அவர் எதை அடையணும்னு நினைக்கிறாரோ அதை அடைய முடியாது.
ஒருத்தர கடசில சேர்க்குறதுக்கு முன் டிடெக்டிவ் வெச்சு அவர் யாரு, பேக்ரவுண்ட் என்னன்னு அலசி ஆராயணும். திறமையானவங்களா, இளம் வயதுக்காரர்களா, புதியவர்களா, பொருளாதாரம் தெரிஞ்சவங்களா, உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கத் தயாரா இருக்குறவங்களா பார்த்து கட்சில சேர்த்துக்கணும். அதை விட்டுட்டு குற்றவாளிகளை சேர்த்து வெச்சிக்கிட்டா நல்லதில்ல. இதோ பாருங்க, பணம் படைச்ச எத்தனையோ பெரிய பெரிய நடிகர்கள்லாம் இருக்காங்க. அவங்கள்லாம் செய்யாத நலத்திட்ட உதவிகளை நாங்க களமிறங்கிச் செய்றோம். எங்களையெல்லாம் விஜய் கண்ணுக்குத் தெரியாது'' என்றார்.

'வரும் சட்ட மன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திப்பீர்கள்?' என்ற கேள்விக்கு ''சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் அது பற்றி சொல்கிறேன்'' என்றார்.
நிகழ்வை துவக்கி வைத்துப் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 10 வருடங்களில் ஆற்றிய சமூகப் பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
அடை மழையிலும் விடாது மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.

