Jun 30, 2018 12:29 PM

கந்து வட்டி பற்றி படம் எடுத்த இயக்குநருக்கு மிரட்டல்!

கந்து வட்டி பற்றி படம் எடுத்த இயக்குநருக்கு மிரட்டல்!

கமர்ஷியலாக படம் எடுப்பதைக் காட்டிலும், சமூகத்திற்கு தேவையான அல்லது சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளியுலகிற்கு காட்டும் வகையில் படம் எடுப்பவர்கள் என்னவோ சிலர் தான். அந்த சிலர்களில் ஒருவர் தான் இயக்குநர் சியோன். 

 

‘பொது நலன் கருதி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சியோன், தனது முதல் படத்திலேயே சமூகத்தில் நடக்கும் குற்றங்களில் ஒன்றான கந்து வட்டி பற்றியும், அதனால் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் கந்து வட்டி தொழிலுக்கு பின்னணியில் இருக்கும் மாபியா கும்பல் என இதுவரை கந்து வட்டி பின்னணி குறித்து தெரியாத விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்.

 

ஏ.வி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அன்புவேல்ராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் மூவரும் நாயகர்களாக நடித்திருக்கின்றனர். சுபிக்சா, அனு சித்தாரா, லிசா மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், இமான் அண்ணாச்சி, ‘பில்லா’ பட வில்லன் யோக் ஜோபி, ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘சுப்ரமணியபுரம்’ ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

ஹரி கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோபி ஆனந்த் கலையை நிர்மாணித்துள்ளார். விஜய் ஆனந்த் இணை தயாரிப்பை கவனித்துள்ளார்.

 

இப்படம் பற்றி கூறிய இயக்குநர் சியோன், “பணக்கார வர்க்கத்துக்கும், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் தான் இந்தப் படத்தின் கதைக் கரு.

 

சூழ்நிலை கைதிகளாய் மாறி தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்கும் சில அப்பாவி இளைஞர்களின் கதைதான் இத்திரைப்படம்.

 

‘இல்லாதவனே பொல்லாதவனாம் ஊரிலே’ என்று சொல்வதுபோல சகல துறைகளிலும் பந்தாடப்படும் நடுத்தர வர்க்கம், எதையாவது செய்து முன்னுக்கு வர முடியாதா.. என்று துடிக்கும் இளைஞர்கள் பலர் எதையும் செய்யத் துணியும் ஆக்டோபஸ் பண முதலைகளிடத்தில் சிக்கி தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொள்வது தான் படத்தின் திரைக்கதை.

 

பணம் படைத்த பலரும் பணம் இல்லாதவர்களிடம் செலுத்தும் அதிகாரமே கந்து வட்டி பிரச்சினை. இந்த கந்து வட்டியால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன. பல குடும்பங்கள் திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு ஆண்டுக்கு முன்பாக பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதிகள் கந்து வட்டி கொடுமையால் தங்களது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. இதன் பின்னணியில் உள்ள நிழல் தாதாக்களின் கதைதான் இந்த ’பொது நலன் கருதி’ திரைப்படம்.” என்றார்.

 

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு தற்போது பல எதிர்ப்புகள் வர தொடங்கியுள்ளதாம். இயக்குநர் சீயோனுக்கும் பல மிரட்டல் விடுத்து வருவதாக, அவர் தெரிவித்துள்ளார். என்னதான் மிரட்டல் வந்தாலும், என்ன தடை வந்தாலும், ‘பொது நலன் கருதி’ படத்தை சரியான நேரத்தில் வெளியீட்டு மக்களை சென்றடைய செய்வோம், என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறார்கள்.