Apr 10, 2020 03:02 PM

ரஜினிகாந்த் நிராகரித்த கதை படமாகிறது! - ஹீரோ யார் தெரியுமா?

ரஜினிகாந்த் நிராகரித்த கதை படமாகிறது! - ஹீரோ யார் தெரியுமா?

’தர்பார்’ படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்தே’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் தடைப்பட்டுள்ளது. அதே சமயம், அண்ணாத்தே படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், இளம் இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த சில வருடங்களாகவே சீனியர் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் ரஜினிகாந்த், இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவரது அடுத்தப் படமும் இளம் இயக்குநர் ஒருவர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

 

இதற்கிடையே, ரஜினிகாந்த் நிராகரித்த கதை படமாக இருப்பதாகவும், அதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’. சுமார் ஒரு வருடம் ஓடிய இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குநர் பி.வாசு தயார் செய்து அதில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால், ரஜினிகாந்த் அதில் நடிக்க மறுத்துவிட்டார்.

 

ரஜினிக்காக காத்திருந்த இயக்குநர் பி.வாசு, ‘சந்திரமுகி 2’ கதையை வேறு ஹீரோவை வைத்து படமாக்க முடிவு செய்தார். இதையடுத்து, ரஜினிக்கு அடுத்தப்படியாக உள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து ‘சந்திரமுகி 2’-வை எடுக்க முயற்சித்த பி.வாசு, அது நடக்காததால் ராகவா லாரன்ஸை ஹீரோவாக வைத்து அப்படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.

 

Raghava Lawrence

 

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி 2’-வில் ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியிருப்பதாகவும், அதற்காக ராகவா லாரன்ஸ் அட்வான்ஸும் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற தகவல்கள் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததும் வெளியிட இருக்கிறார்களாம்.