’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டேட்டா பிரைவசி, சைபர் தடயவியல் உள்ளிட்ட மென்பொருள் துறையில் உலகளவில் பெயர் பெற்ற பாபி பாலச்சந்திரன், பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.
முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்த ’டிமாண்டி காலனி 2’ ஹாரர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அடுத்து, இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், வைபவ் மற்றும் அதுல்யா நடித்த ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன், பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் அவர்களின் திரை வாழ்க்கையில் பிரம்மாண்டமான படைப்பாக ’ரெட்ட தல’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.

