Feb 14, 2021 06:00 PM

சசிகலா தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்! - அறிமுக இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு

சசிகலா தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்! - அறிமுக இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு

திரைத்துறையில் தங்களது பெயரை ஒரு பகுதியில் பொறித்திட வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வாய்ப்பு தரும் தளமாக கோலிவுட்டில் இன்று ஆரம்பமாகியுள்ளது சசிகலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

 

இளம் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் மற்றும் குறும்பட இயக்குநர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சசிகலா புரொடக்‌ஷன்ஸ் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது.

 

இளம் மாணவ இயக்குநர்கள் மற்றும் அறிமுக இயக்குநர்களுக்கு புரொடக்‌ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான உதவிகளையும், சிறப்பு சலுகைகளையும் செய்யவும் தயாராக உள்ள இந்நிறுவனம், சினிமாத்துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், ’Freedom of Film making’ எனும் தாரக மந்திரத்துடன், விரைவில் தனது பணிகளை துவங்க உள்ளது.

 

சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நிறுவப்பட்டுள்ள சசிகலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து நிறுவனத்தை திறந்து வைத்தார்கள்.

 

Sasikala Production

 

நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், “சசிகலா புரொடக்‌ஷன் நிறுவனம் வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலே புரிகிறது. மேலும் இந்நிறுவனத்திலிருந்து பல தரமான கலைஞர்கள் வெளி வருவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என்றார்.

 

நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில், “நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால், திரைக்கு பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர். அத்தகு கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு.” என்றார்.

 

இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசுகையில், “குட்டி ஏவிஎம் விரைவில் உருவாக்கப்படும்.” என்றார்

 

ஒரு திரைப்படத்திற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் வசதிகளை ஒரே இடத்தில் கொண்ட இந்நிறுவனம் தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.