May 29, 2020 02:31 PM

‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநரின் புதிய முயற்சி!

‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநரின் புதிய முயற்சி!

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’, கடந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் முன்னிலை பெற்றது. அப்படத்தில் காதலை வெவ்வேறு பருவத்திற்கு ஏற்ப சொல்லிய விதமும், அதில் இருந்த எதார்த்தமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகியுள்ள ஹலீதா ஷமீம், தற்போது ‘மின்மினி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பூவரசம் பீப்பி’ படம் தான் ஹலீதா ஷமீமின் முதல் படம். அப்படத்திற்கு பிறகு தனது இரண்டாவது படமாக ‘மின்மினி’ யை அவர் தொடங்கினாலும், இடையில் அப்பட்த்தை நிறுத்திவிட்டு ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை இயக்கி முடித்தார். இதற்கு காரணம், ஹலீதா மேற்கொண்ட புதிய முயற்சி தான்.

 

குழந்தை பருவத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் ஒருவராகவும், அதே கதாப்பாத்திரம் வாலிப பருவத்திற்கு வரும் போது அதில் நடிப்பவர் வேறு நடிகராக இருப்பது தான் சினிமாவின் பெரும்பாலான வழக்கம். ஆனால், இதனை மாற்றி, படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவர்களையே, வாலிப கதாப்பாத்திரத்திலும் ஹலீதா ஷமீம் நடிக்க வைத்திருக்கிறார். இதற்காக சிறுவர்கள், தான் நினைத்த வாலிப கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு வளர்வதற்காகவே சுமார் 6 ஆண்டுகள் காத்திருந்து இப்படத்தை படமாக்கி வருகிறார்.

 

Director Halitha Shameem

 

இத்தகைய புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கும் ஹலீதா ஷமீம் தனது மூன்றாவது படமான ‘மின்மினி’ குறித்து கூறுகையில், “பதின் பருவத்தினரின் உலகில் நுழைந்து அவர்களின் உணர்ச்சிகரமான வாழ்வியலை படத்தில் பதித்தது எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது. உணர்ச்சிகளால் ஆளப்படும் இளம்பருவத்தினரின் இந்தப் பகுதியை மற்றவர்கள் புரிந்து கொள்வது சற்றே கடினமானது. வெற்றியைக் கொண்டாடுவது, காதலை வெளிப்படுத்துவது, தோல்வியை எதிர்கொள்வது என்று எந்த விதமான உணர்ச்சிகளையும் ஒரு விதமான அதீத தன்மையுடன் வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர் பதின் பருவத்தினர். இது ஏன் என்ற கேள்வியே, பதின் பருவத்தினரைப் பிரதானப்படுத்தி ஒரு கதை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. படத்தைப் பற்றி மேலும் நான் விளக்குவதைவிட ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.” என்றார்.

 

கெளரவ் கலை, ப்ரவீண் கிஷோர் மற்றும் ‘த்ரிஷ்யம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களில் நடித்த எஸ்தர் அனில் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை, ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்த ராமானுஜம் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.