Feb 17, 2021 06:47 AM

இராமநாராயணனின் உதவியாளர் இயக்கும் ‘ஓட்டம்’!

இராமநாராயணனின் உதவியாளர் இயக்கும் ‘ஓட்டம்’!

125 திரைப்படங்கள் இயக்கி சாதனை படைத்த மறைந்த இயக்குநர் இராமநாராயணனிடம், ‘ராஜகாளியம்மன்’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘மண்ணின் மைந்தன்’ ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றிய எம்.முருகன், ‘ஓட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரது வரிசையில், இப்படத்திற்கு இசையமைக்கும் எஸ்.பிரதீப்வர்மா, இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

 

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஹி, கேரளாவை சேர்ந்த அனுஸ்ரேயா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் தயாரிப்பாளர் ரவிஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சாய் தீனா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

ஜோசப்ராய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம்தேவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மஞ்சு நடனப் பயிற்சியையும், சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி ஆகியோர் ஆன்லைன் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எம்.முருகன் இயக்கும் இப்படத்தை ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமா ரவிஷங்கர் தயாரிக்கிறார்.

 

தேனிலவு செல்லும் தம்பதிகள் சந்திக்கும் திகிலான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைக்களமான இப்படத்தில் மர்மம், திகில் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் பல நிரைந்திருக்கும், என்று இயக்குநர் எம்.முருகன் கூறுகிறார்.

 

சென்னை, கோவை மற்றும் சிக்மகளூர் சக்கலேஷ்புராவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.