Dec 22, 2025 04:43 AM

கியாரா அத்வானியை பாராட்டிய ‘டாக்ஸிக்’ இயக்குநர்!

கியாரா அத்வானியை பாராட்டிய ‘டாக்ஸிக்’ இயக்குநர்!

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது. இந்த வெளியீடு, படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

 

பல்வேறு ஜானர்களில் தனது திறமையை நிரூபித்து, இந்தி திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ள கியாரா அத்வானி, இந்தப் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ்  உருவாக்கியுள்ள தீவிரமான, கச்சிதமான உலகத்தில், கியாராவின் இந்த பாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

‘நாடியா’வின் ஃபர்ஸ்ட்  லுக், வண்ணமயமான சர்க்கஸ் பின்னணியில், கவர்ச்சியான தோற்றத்தில் கியாராவை காட்டுகிறது. ஆனால், நுணுக்கமாக கவனித்தால், அந்த பிரகாசத்தின் அடியில் ஒரு ஆழமான துயரம், வேதனை மற்றும் மனவலி மறைந்திருப்பது தெளிவாகிறது. இதனால், ‘நாடியா’ என்பது ஒரு வழக்கமான கதாபாத்திரமல்ல; நடிகையின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும், வலுவான, உணர்ச்சி மிக்க பாத்திரம் என்பதற்கான வெளிப்பாடாக இந்த ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.

 

கியாராவின் நடிப்பைப் பற்றி இயக்குநர் கீத்து மோகன்தாஸ் கூறுகையில், “சில கதாப்பாத்திரத்தின் நடிப்பு,  ஒரு திரைப்படத்திற்குள் மட்டும் சுருங்கி விடாது; அவை ஒரு கலைஞரையே மறுபரிசீலனை செய்யக்கூடியதாக இருக்கும். இந்தப் படத்தில் கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு இயக்குநராக, அவர் இக்கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும்,  அவரது நம்பிக்கைக்கும், மனப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.” என்றார்.

 

’கே.ஜி.எப் - அத்தியாயம் 2’ மூலம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, யாஷ் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பும் படம் ‘டாக்ஸிக்’. மேலும், KGF வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

 

Kiara Advani in Toxic

 

யாஷ் மற்றும் கீத்து மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

 

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் ஜெ.ஜெ.பெரி (John Wick) மற்றும் தேசிய விருது பெற்ற அன்பறிவ் இணை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்.

 

வெங்கட் கே.நாராயணா மற்றும் யாஷ் இணைந்து கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations) நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, 2026 ஆம் ஆண்டு,  மார்ச் 19 ஆம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.