இந்த படம் எங்களுக்கு பெருமை - ‘கிகி & கொகொ’ படக்குழு உற்சாகம்
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இனிகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசுகையில், “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமான கதை இது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.
இயக்குநர் நாராயணன் பேசுகையில், “குழந்தை என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம். அந்த வரத்தை நாம் உருவாக்குகிறோம் எனும்போது அதில் பெருமை அடைய வேண்டும். ஸ்பைடர்மேன் பறப்பது, ஹீமேன் அடிப்பது என நிஜத்தில் நடக்காத பல ஃபேண்டசி விஷயங்களைதான் குழந்தைகளுக்கு திரைப்படத்தில் அறிமுகப்படுத்துகிறோம். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். யாரையும் அடிக்க போவதில்லை, யாரும் பறக்க போவதில்லை. நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது யாருக்காவது உதவுகிறோம், சிரிக்கிறோம், நன்றியை நினைத்து பார்க்கிறோம், அன்பாக இருக்கிறோம். இந்த நடைமுறை விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான். எல்லோரையும் அன்பாக வைத்திருங்கள், அன்பு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.” என்றார்.
விஎஃப்எக்ஸ் இயக்குநர் கோகுல்ராஜ் பாஸ்கர் பேசுகையில், “கடந்த ஒரு வருடமாக ‘கிகி & கொகொ’ கதை பற்றி விவாதித்திருக்கிறோம். நிறைய ஹாலிவுட், தமிழ், மலையாளப் படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கிகி கேரக்டர் டிசைன் செய்ய காட்டன் ஃபிளவரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் செய்தேன். குழந்தைகளுக்கான படம் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களை காயப்படுத்தாதபடி எடுக்க வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். எங்கள் முயற்சிக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆதரவும் தேவை.” என்றார்.
விஎஃப்எக்ஸ் ஸ்பெஷலிஸ்ட், கிரியேட்டிவ் புரொடியூசர் ஜி.எம். கார்த்திகேயன் பேசுகையில், “இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறேன். மீனா மேடத்திடம் இருந்துதான் இந்தக் கதை ஆரம்பித்தது. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட இந்தக் கதையை சிறப்பாகக் கொண்டு வர வேண்டும் என புனே, பெங்களூருவில் இருந்தும் டீம் வரவழைத்து பணி செய்திருக்கிறோம். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் சி. சத்யா பேசுகையில், “இந்தப் படத்தின் டைட்டிலே ஆங்கிலப் பாடலுக்கு இசையமைப்பது போன்ற உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த படமே எனக்கு புது அனுபவம். எந்தவிதமான மனக்கவலை இருந்தாலும் அந்த இடத்தில் குழந்தைகள் இருந்தால் எனர்ஜி கிடைக்கும். அப்படி எனக்குப் பிடித்த குழந்தைகளுக்கான படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி” என்றார்.
புரொடக்ஷன் ஹெட் சிவராஜ் பேசுகையில், “குழந்தைகளுக்கான நேர்மறையான கதையம்சம் கொண்ட 80 நிமிட படம் இது. ஆர்வமூட்டும் விதமாகவும் எனர்ஜியாகவும் இந்தப் படம் இருக்கும்.” என்றார்.
குழந்தை நட்சத்திரம் ஸ்ரீனிகா பேசுகையில், “நான் தான் இந்தப் படத்தில் கொகொ. கொகொவுக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் நடித்த பிறகு எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது” என்றார்.

