Jan 30, 2021 03:22 PM

மக்களின் கவனத்தை ஈர்த்த ‘வாய்தா’ ஃபர்ஸ்ட் லுக்!

மக்களின் கவனத்தை ஈர்த்த ‘வாய்தா’ ஃபர்ஸ்ட் லுக்!

தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக உருவாகியுள்ள படம் ‘வாய்தா’.அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம்  மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்ட செட் அமைத்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி நீதிமன்ற கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை என்ற வாசகமும் மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Vaaitha

 

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.