Jan 07, 2022 04:57 AM

‘அன்பறிவு’ விமர்சனம்

bbb109a867c270d5a51080843f510725.jpg

Casting : Hip Hop Tamizha Aadhi, Kashmira, Shivani, Napoleon, Vidharth, Sai Kumar, Aasha Sarath, Naren, Renuka

Directed By : Ashwin Ram

Music By : Hip Hop Tamizha Aadhi

Produced By : Sathya Jyothi Films - TG Thyagarajan, Arjun Thyagarajan, Senthil Thyagarajan

 

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, அர்ஜுன் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் ஆகியோரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘அன்பறிவு’. நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.

 

குழந்தையாக இருக்கும் போது பிரிந்துவிடும் இரட்டையர் சகோதரர்களான அன்பு மற்றும் அறிவு, வளர்ந்த பிறகு ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள், எப்படி ஒன்று சேர்கிறார்கள், என்ற பழைய ஃபார்முலா கதை தான் என்றாலும், இப்போதும் அதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

 

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, அன்பு மற்றும் அறிவு என இரண்டு வேடங்களில் உருவத்தில் பெரிய வித்தியாசத்தை காட்டவில்லை என்றாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஆட்டம் பாட்டம் என்று எப்போதும் போல இளசுகளை துள்ள வைத்திருக்கும் ஆதி, கூடுதலாக அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் மதுரை மக்களை ஈர்க்கவும் முயற்சி செய்கிறார். 

 

நாயகிகளாக நடித்திருக்கும் காஷ்மிரா மற்றும் ஷிவானி இருவரும் கமர்ஷியல் கதாநாயகிகளுக்கான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

 

வில்லனாக நடித்திருக்கும் விதார்த்தின் கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் பாராட்டும்படி இருந்தாலும், சில இடங்களில் வேறு ஒரு நடிகரின் சாயல் எட்டிப்பார்க்கிறது.

 

ஆதியின் தாத்தாவாக நடித்திருக்கும் நெப்போலியன் முனியாண்டி என்ற வேடத்தில் காட்டும் முரட்டுத்தனமும், இறுதியில் தான் முட்டாள் ஆக்கப்பட்டதை உணர்ந்து வருந்துவதும், சாதி வெறி பிடித்தவர்களுக்கு சவுக்கடி.

 

ஆதியின் அப்பா வேடத்தில் நடித்திருக்கும் சாய்குமார், அம்மாவாக நடித்திருக்கும் ஆஷா சரத், அர்ஜெய், ரேணுகா, ஆடுகளம் நரேன் என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள்.

 

இரட்டையர்கள் ஒன்றாக தோன்றும் காட்சியில் நேர்த்தியாக கேமராவை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட படத்தின் அனைத்து காட்சிகளையும் பிரமாண்டமாக காட்டியுள்ளார்.

 

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கிறது. பின்னணி இசை கமர்ஷியல் படத்திற்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

 

சாதி பாகுபாடு இன்றி மனிதர்களை மதிக்க வேண்டும் என்ற கதைக்கருவுக்கு, ”ஒரே இரத்தம்”, ”மாட்டை கடவுளாக பார்ப்பவர்கள் மனிதர்களை ஏன் மதிப்பதில்லை”, என்று வாட்ஸ்-அப் வாக்கியங்களை வசனமாக எழுதியிருக்கும் பொன் பார்த்திபன், சில இடங்களில் தனது வசனம் மூலம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மறைமுகமாக புன்படுத்தியிருக்கிறார்.

 

ஹிப் ஹாப் ஆதியின் ஒல்டு கதையை ரசிகர்கள் கோல்டாக கொண்டாடும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குநர் அஸ்வின் ராம், அனைத்து தரப்பினருக்குமான படமாக இருக்க வேண்டும் என்பதோடு இளைஞர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார்.

 

படத்தை பார்க்கும் போது கோலிவுட்டில் வெளியான பல படங்கள் நம் நினைவுக்கு வந்துபோனாலும், அந்த நினைவுகளை நிராகரிக்கும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் அஸ்வின் ராம், இளைஞர்களுக்கு தேவையான மேசஜ் ஒன்றை எந்தவித சர்ச்சையும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லியிருப்பது பாராட்டும்படி உள்ளது.

 

மொத்தத்தில், ‘அன்பறிவு’ கமர்ஷியல் கருத்து

 

ரேட்டிங் 3/5