Sep 06, 2025 02:25 PM

’பேட் கேர்ள்’ திரைப்பட விமர்சனம்

dc40be589d70c744aeb3888a1aa8d716.jpg

Casting : Anjali Sivaraman, Shanthipriya, Saranya Ravichandran, Hridhu Haroon, Teejay Arunasalam, Sashank Bommireddipalli

Directed By : Varsha Bharath

Music By : Amit Trivedi

Produced By : Grass Root Film Company

 

நாயகி அஞ்சலி பள்ளியில் படிக்கும் போது சக மாணவனை காதலிக்கிறார். இந்த விசயம் அவரது பெற்றோருக்கு தெரிந்து கண்டிப்பதுடன், வேறு பள்ளிக்கு அவரை மாற்றுகிறார்கள். பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு நான் நினைத்தபடி தான் வாழ்வேன்”, என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரி காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், கட்டில் உறவு என்று பயணிப்பவர், அந்த காதல் பொய் என்பதை உணர்ந்து வருந்துகிறார், கோபம் கொள்கிறார். பிறகு வேலைக்கு செல்லும் காலத்தில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, அதிலும் சண்டை பிரிவு என்று பயணிப்பவர், இறுதியில் தனக்கான காதல் எது என்பதை கண்டுபிடித்தாரா  இல்லையா ? என்பது தான் மீதிக்கதை.

 

அது தவறு, இந்த வயதில் இது தேவையா?, என்று சொல்லி கட்டுப்படுத்த நினைப்பதை விட, பெண்களை சுதந்திரமாக விட்டாலே, அவர்களே அவர்களது வாழ்க்கையில் எது தவறு, எது சரி என்பதை உணர்ந்துக் கொள்வார்கள், என்ற கருத்தை படம் பேசுகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்கள், ஒவ்வொரு ரீதியாக அடிமைப்பட்டு கிடப்பதும், அதில் இருந்து மீண்டு வருவதை மிக எதார்த்தமாக இயக்குநர் வர்ஷா பரத் சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன், முழு படத்தையும் தன் நடிப்பால் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மெதுவாக நகர்ந்தாலும், அஞ்சலி சிவராமனின் நடிப்பு அதனை மறக்கடித்து படத்தை ரசிக்க வைக்கிறது. காதலனை நினைத்து உருகுவது, தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தும், காதலன் நினைவாக இருப்பது, மருத்துவரிடம் தனது நிலை குறித்து விவரிப்பது, பூனையை கொஞ்சுவது, பாட்டியின் இறப்பில் அழுவது என படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.

 

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சாந்திபிரியாவின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் எதார்த்தமாக இருக்கிறது.

 

சரண்யா ரவிச்சந்திரன், ஹிர்து ஹரூன், டீஜே, சுஷாங் பொம்மரெட்டிபல்லி என மற்ற வேடங்களில் நடித்தவர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக பயணிக்கிறது. அமித் திரிவேதியின் இசையிலும் குறையில்லை. ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பு படத்தை மெதுவாக நகர்த்தினாலும், நாயகியின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் வர்ஷா பரத், பெண்களுக்கு பூட்டப்படும் அடிமைச் சங்கிலி அடுத்த தலைமுறையினருக்கு எப்படி மாற்றப்படுகிறது என்பதையும், அதில் இருந்து விடுபட முயற்சிப்பவர்களின் போராட்டம் மற்றும் தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு பயணிக்கும் பெண்கள் மனதை மிக தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

குறிப்பிட்ட சமூகம் மற்றும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வர்ஷா பரத், எந்த சமூகமாக இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கைத்தரத்தில் இருந்தாலும், பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில் வைத்து பார்க்கும் பொதுவான சமூகத்தைப் பற்றி பேசதாததோடு, குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே புரியும்படி படத்தை இயக்கியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.

 

மொத்தத்தில், ‘பேட் கேர்ள்’ கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு பேட்- ஆக தெரிந்தாலும், உலக சினிமா ரசிகர்களுக்கு குட் படமாக இருக்கும்.

 

ரேட்டிங் 3/5