Aug 22, 2021 10:17 AM

’பூமிகா' விமர்சனம்

fbde29cb39205a294f4d8ed811951882.jpg

Casting : Aishwarya Rajesh, Vidhu, Avandhika, Surya Ganapathi, Madhuri, Paval Navageethan

Directed By : Radhindran R.Prasad

Music By : Prithvi Chandrasekar

Produced By : Karthikeyan Santhanam, Sudhan Sundaram, Jeyaraman

 

நிலம், நீர், காற்று ஆகியவற்றை அடக்கி ஆள நினைக்கும் மனிதக்குளத்தை எச்சரிப்பது தான் கதைக்களம். ஆனால், அதை சும்மா சொல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான திகில் ஜானரில் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ், அவருடைய கணவர், குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் என ஐந்து பேரும் ஊட்டியில் உள்ள பழைய எஸ்டேட் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் திகில் சம்பவங்களும், அதன் பின்னணியும் தான் கதை.

 

காரில் பயணிப்பவரின் கொடூர மரணத்தை காட்டி, படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் இயக்குநர், ஊட்டியில் நடக்கும் அடுத்தடுத்த காட்சிகள் மூலம் படம் முழுவதையும் திகிலுடன் பார்க்க வைக்கிறார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ், கதையின் நாயகியாக அல்லாமல் ஒரு கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். அனைத்து விஷயங்களையும் தெரிந்தவராக இருந்தாலும், பயத்தையும் முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் விது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. விதுவின் தோழியாக நடித்திருக்கும் சூர்யா கணபதி கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். விதுவின் தங்கையாக நடித்திருக்கும் மாதுரி, படம் முழுவதும் கத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருடைய கத்தல் நம்மை கடுப்படையவும் செய்கிறது.

 

விதுவின் உதவியாளராக நடித்திருக்கும் பாவல் நவகீதன் நீலகிரி வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை தனது நடிப்பு மூலம் பிரதிபலித்திருப்பதோடு, ஒரு சில வசனங்களிலேயே அம்மக்களின் வாழ்வியலை பொட்டில் அடித்து புரிய வைக்கிறார். 

 

படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷை முதன்மை படுத்தியிருந்தாலும், படத்தை பார்த்த பிறகு படத்தின் நாயகியாக நம் மனதில் அழுத்தமாக பதிபவர், பூமிகா என்ற வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா தான். வசனம் பேசாமலேயே தனது மனநிலையை ரசிகர்களிடத்தில் சேர்க்கும் அவரது நடிப்பு படத்திற்கும், பூமிகா கதாப்பாத்திரத்திற்கும் பலர் சேர்த்துள்ளது.

 

அழகுக்கு அழகு சேர்ப்பது போல் ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜஸாராவின் பணி அமைந்துள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு ஊட்டியின் அழகையும், பசுமையையும் அனுபவிக்கும் உணர்வு ஏற்படும் வகையில் காட்சிகளை படமாக்கியிருப்பவர், இரவுக் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

 

பேய் படம் என்றாலே பின்னணி இசையும் ஒரு கதாப்பாத்திரம் தான், என்பதை புரிந்துக்கொண்டு பணியாற்றியிருக்கும் இசையமைப்பாளர் பிருத்வி சந்திரசேகர் பயமுறுத்துகிறார்.

 

வழக்கமாக பேய் படங்களில் இருப்பது போன்ற பிளாஷ்பேக், பேயின் பழிவாங்கும் பகுதி ஆகியவை இந்த படத்திலும் இருந்தாலும், அதன் கரு மற்றும் சொல்லிய விதம் மூலம் இந்த ‘பூமிகா’ மற்ற பேய் படங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதோடு, ஒரு நல்ல விஷயத்தை சொல்லி எச்சரிக்கவும் செய்கிறது.

 

உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை, ஒரு குறிப்பிட்ட இடத்தில், மிக எளிமையான முறையில் சொன்னாலும், படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதியும்படி இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

 

விறுவிறுப்பு மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்த திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சில குறைகளும் இருக்கின்றன. அந்த குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘பூமிகா’ வையும், இயக்குநர் ரவீந்திரன் ஆர்.பிரசாத்தையும் ரசிகர்கள் பாராட்டி வரவேற்பது நிச்சயம்.

 

ரேட்டிங் 3.5