’பூகம்பம்’ திரைப்பட விமர்சனம்

Casting : Ishaq Hussaini
Directed By : Ishaq Hussaini
Music By : Sathasiva Jeyaraman
Produced By : I International - Ishaq Hussaini
சிறு வயதில் தந்தை மற்றும் தம்பியை பிரிந்து ஆதரவற்ற இல்லத்தில் வளரும் அண்ணன் இஷாக் உசைனி, தனது தந்தையையும், அவருடன் வாழும் தம்பியையும் பழிவாங்க தேடுகிறார். அதே சமயம், சிறு வயதில் தொலைந்து போன தனது அண்ணனை பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் தம்பி இஷாக் உசைனி, என்றாவது ஒருநாள் அண்ணனை சந்தித்து விடுவோம், என்ற நம்பிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
தம்பி மீது கொலை வெறியோடு இருக்கும் அண்ணன் இஷாக் உசைனியும், அண்ணன் மீது அதீத பாசத்தோடு இருக்கும் தம்பி இஷாக் உசைனியும், அரசியல் மற்றும் காதல் மூலம் எதிரிகளாக சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அண்ணன் - தம்பி என்று தெரியாமலேயே இருவரும் மோதிக்கொள்ள, உண்மை தெரிந்த பிறகு என்ன ஆனது ?, குடும்பத்தை விட்டு இஷாக் உசைனி பிரிந்தது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.
தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி கொற்கை பாண்டியன் மற்றும் கல்லூரி மாணவர் பிரபாகரன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் நாயகன் இஷாக் உசைனி. அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களிலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை வெளிப்படுத்துவதற்காக அவர் கையாண்டிருக்கும் யுத்தி கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், கமல்ஹாசனின் ‘இந்திரன் சந்திரன்’ படத்தை நினைவுப்படுத்துகிறது.
பிரியா மற்றும் ஜூலி என்ற கதாபாத்திரங்களில் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இரண்டு நடிகைகளும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சாத்தான் வழிபாட்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், கல்லூரி மாணவர்களாக நடித்தவர்கள் என அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாலர் சதாசிவ ஜெயராமன், ஒளிப்பதிவாளர்கள் தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ், படத்தொகுப்பாளர் நவீன்குமார் ஆகியோர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் போட்ட வட்டத்திற்குள் பயணித்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள்.
நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இஷாக் உசைனி, அஜித்தின் ‘வரலாறு’ படத்தின் கதையை மையக்கருவாக வைத்துக்கொண்டு, அரசியல் ஆக்ஷன் மாஸ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
கதை எதுவாக இருந்தாலும் சரி, யார் நடிகர்களாக இருந்தாலும் சரி, படத்திற்கு சம்மந்தம் இல்லாத காட்சிகளாக இருந்தாலும் சரி, தான் சொல்ல வந்த கதையோடு அனைத்தையும் சேர்த்து ஒரு திரைப்படமாக கொடுப்பதில் இஷாக் உசைனி வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘பூகம்பம்’ பார்வையாளர்களை பாதிக்கும்.
ரேட்டிங் 2/5