Dec 03, 2021 02:33 AM

‘சித்திரைச் செவ்வானம்’ விமர்சனம்

340bf0325062403ab21ccc367949214d.jpg

Casting : Samuthirakkani, Pooja Kannan, Reema Kalingal

Directed By : Stunt Silva

Music By : Sam CS

Produced By : Think Big Studios, Amirtha Studios, Zee Studios

 

விவசாயியான சமுத்திரக்கனி தனது மகள் பூஜா கண்ணனனை மருத்துவராக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்கிறார். பூஜ கண்ணனும் 12ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்க, அவரை நீட் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்றில் சமுத்திரக்கனி சேர்க்கிறார். 

 

விடுதியில் தங்கி படித்து வரும் பூஜா கண்ணனின் குளியல் அறையில் வீடியோ ஒன்று இணையத்தில் பரவுகிறது. அந்த வீடியோ வெளியான நாள் முதல் பூஜா கண்ணன் மாயமாகி விடுகிறார். மகள் என்ன ஆனார், என்ற வேதனையோடு, அந்த வீடியோவை அழிக்கும் முயற்சியில் இறங்கும் தந்தை சமுத்திரக்கனி, வீடியோ எடுத்தவர்களை எப்படி கண்டுபிடித்து, அதை எப்படி அழிக்கிறார், மாயமான பூஜா கண்ணனுக்கு என்ன ஆனார், என்பதை வலியோடு சொல்லியிருப்பது தான் ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் கதை.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி கதைக்கரு பேசியிருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா நகர்த்தி செல்ல முயற்சித்திருக்கிறார்.

 

தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். மனைவிய இழந்த பிறகு மகளே வாழ்க்கை என்று வாழும் ஒரு சராசரி தந்தையை பிரதிபலிப்பவர், தனது மகளுக்கு நடந்த கொடுமையை எண்ணி கலங்கும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் கண் கலங்க செய்துவிடுகிறார்.

 

சமுத்திரக்கனியின் சிறு வயது மகளாக நடித்திருக்கும் சிறுமி மாணஸ்வியும் சரி, இளம் வயது மகள் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா கண்ணனும் சரி அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

பூஜா கண்ணன் முதல் படத்திலேயே அழுத்தமான மற்றும் கவனம் பெறும் கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தாலும், நடிப்பில் அறிமுக படம் என்பது தெரியாதவாறு நடித்திருக்கிறார்.

 

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரீமா கலிங்கலின் நடையிலும், நடிப்பிலும் இருக்கும் கம்பீரம் அந்த கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுப்படுத்தும் கதாப்பாத்திரங்களாக வரும் இளைஞர்களும், அவர்களுடைய தந்தையர்களாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் இயக்குநர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

சாம் சி.எஸ் இசையில், வைரமுத்து வரிகளில் பாடல்கள் அனைத்தும் மனதை தொடுவதோடு, உதட்டையும் அசைபோட வைக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், திடீரென்று கதைக்கு பொருந்தாத சத்தங்களை பயன்படுத்தி படம் பார்ப்பவர்களை சங்கட படவும் வைக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

 

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரஹம்சா மற்றும் ஆர்.ஜி.வெங்கடேஷ் கிராமத்தின் காட்சிகளை அழகாகவும், கதாப்பாத்திரங்களின் வலிகளை அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநரான ஸ்டண்ட் சில்வா, இயக்குநராக அறிமுக படத்திலேயே மிக அழுத்தமான கதைக்களத்தை தேர்வு செய்திருக்கிறார்.

 

இயக்குநர் விஜயின் கண்ணீர் நிறைந்த கதைக்கு, வலிமிகுந்த திரைக்கதையை வடிமைத்திருக்கும் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, முதல் பாதி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, காணாமல் போன பெண் என்ன ஆனார்? என்ற எதிர்ப்பார்ப்போடு நம்மை படம் பார்க்க வைக்கிறார்.

 

பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் இயக்குநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அப்படிப்பட்ட கசப்பான சம்பவங்களால் முடங்கி விடாமல், அவற்றை கடந்து நம்பிக்கையோடு வாழ வேண்டும், என்ற தன்னம்பிக்கையை கொடுக்காமல், பெண்களை பலவீனமானவர்களாக சித்தரித்து படத்தின் கருவையே சிதைத்து விட்டார்.

 

தந்தை, மகள் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளும், மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மனைவியை இழந்தவர் மகளை மருத்துவராக்க நினைப்பது உள்ளிட்ட காட்சிகள் இரண்டு மணி நேரம் படத்தை நகர்த்துவதற்கு மட்டுமே உதவியிருக்கிறது.

 

முதல் படத்திலேயே சமூக பிரச்சனை பற்றி பேசியிருக்கும் இயக்குநர் ஸ்டண்ட் சில்வாவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இரண்டாம் பாதி படம் முழுவதையும் வலி நிறைந்த காட்சிகள் மூலம் நகர்த்தி செல்பவர் இறுதிக்காட்சியையும் வலியோடு முடிப்பவர், படம் பார்ப்பவர்களையும் வருத்தமடைய செய்துவிடுகிறார்.

 

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்கள் படம்.

 

ரேட்டிங் 3/5