Jun 29, 2019 05:59 AM

‘தர்மபிரபு’ விமர்சனம்

14f2a32796c2838291e904e9c18f973d.jpg

Casting : Yogi Babu, Radharavi, Rekha, Ramesh Thilak

Directed By : Muthukumaran

Music By : Justin Prabhakaran

Produced By : P Ranganathan

 

பி.ரங்கநாதன் தயாரிப்பில், முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் ‘தர்மபிரபு’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

எமனான ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் அவரது மகன் யோகி பாபுவை தனது பதவியில் உட்கார வைக்கிறார். ஆனால், அந்த பதவிக்கு ஆசைப்படும் சித்ரகுப்தனான ரமேஷ் திலக், சதி செய்து யோகி பாபுவை பதவியில் இருந்து தூக்க திட்டமிடுகிறார். அதன்படி, தனது தந்திரத்தினால் யோகி பாபுவை பூமிக்கு அழைத்து வர, அங்கே யோகி பாபு விதி முடிந்த குழந்தையின் உயிரை காப்பாற்றுவதோடு, வில்லனான அழகம்பெருமாள் உயிரையும் காப்பாற்றிவிடுகிறார்.

 

பல உயிர்களை எடுக்கும் அழகம்பெருமாளின் விதியை சிவபெருமான் முடிக்க, யோகி பாபுவின் அவசரத்தால் அவர் உயிர் பிழைத்து விடுகிறார். இதனால் கோபமடையும் சிவபெருமான், ”அழகம்பெருமாளின் உயிரை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும், இல்லையெனில் எமலோகத்தை அழித்துவிட்டு, புதிய எமலோகத்தை உருவாக்கிவிடுவேன்” என்று யோகி பாபுவை எச்சரிக்கிறார். இதனால் மறு உயிர் பெற்ற அழகம்பெருமாளை அழிக்க பூமிக்கு வரும் யோகி பாபு அவர் உயிரை எடுக்க முடியாமல் திணற, பிறகு ஒரு திட்டத்தின் மூலம் அழகம்பெருமாளின் உயிரை எடுக்க முடிவு செய்கிறார். அது என்ன திட்டம், அதனால் அழகம்பெருமாளின் உயிரை எமனான யோகி பாபு எடுத்தாரா, இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

தமிழகத்தில் நடந்த அரசியல் சம்பவங்கள், கள்ளக்காதல் கொலைகள், கற்பழிப்பு சம்பவங்கள் என அனைத்தையும் காட்சிகளாக்கி நையாண்டி செய்திருப்பது தான் இப்படத்தின் திரைக்கதை. 

 

தற்போதுள்ள தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து மீம்ஸ் வெளியாவதை ரசிக்கும் மக்கள், அதையே காட்சிகளாக்கினால் பெரிய அளவில் ரசிப்பார்கள், என்ற எண்ணத்தில் கிளம்பியிருக்கும் கூட்டத்தில் இந்த தர்மபிரபு கூட்டமும் ஒன்று. அதிலும், குறிப்பிட்ட ஒரு ஜாதி கட்சி தலைவரையும், குறிப்பிட்ட பெரிய கட்சியையும் குறிவைத்து கலாய்க்கிறேன், என்ற பெயரில் கடி...கடி...என்று கடிக்கிறார்கள்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, நடிப்பு என்ற ஒன்று இருப்பதையே மறந்துவிட்டு பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் அப்படி பேசுவதால் அவரது வாய் வலிக்கிறதோ இல்லையோ, அதை கேட்கும் நம் காது வலியோ வலி என்று வலிக்கிறது.

 

அரசியல் நையாண்டி என்பது அனைவரும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். ஆனால், இந்த படத்தில் அனைவருக்கும் ஆத்திரம் ஏற்படுவதுபோல தான் யோகி பாபுவின் நையாண்டி இருக்கிறது. காமெடி என்ற பெயரில் பல கண்ட்ராவிகளை யோகி பாபு செய்திருக்கிறார்.

 

இசை, ஒளிப்பதிவு மற்றும் இயக்குநர் முத்துகுமரனின் திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாமே தத்துக்குட்டித்தனமாக இருப்பதோடு, படமும் ஏதோ இரண்டு திரைப்படங்களை ஒன்றாக பார்த்த ஒரு பீலிங்கை ஏற்படுத்தும் விதமாக ஜவ்வாக இழுக்கிறது.

 

படம் முடியும் போது, நான் கடவுள் ராஜேந்திரன், “போதும் பாபு முடிச்சிக்கலாம்” என்று வருத்தத்தோடு சொல்ல, யோகி பாபு உடனே வசனத்தை தொடர்கிறார். அப்போது ராஜேந்திரன், “ஐயோ முடிக்க மாட்டான் போலிருக்கே” என்று கூறுகிறார். அவரது இந்த இறுதிக்காட்சி வசனத்தை, ரசிகர்கள் படம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் இருந்து படம் முடியும் வரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சிலர் திரையரங்கை விட்டு எழுந்து சென்ற சம்பவங்களும் அரங்கேறியது.

 

‘தர்மபிரபு’ பாவம் செய்தவர்களுக்கு மட்டும் நரகத்தை காட்டாமல், படம் பார்ப்பவர்களுக்கும் நரகத்தை காட்டிவிடுகிறார். (தாங்கல சாமியோ..)

 

மொத்தத்தில், இவர் ’தர்மபிரபு’ அல்ல ‘தலைவலிபிரபு’

 

ரேட்டிங் 2/5