May 18, 2024 03:10 PM

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

a5cc7472025887a56f3074a40ff20c5f.jpg

Casting : Vijay Kumar, Preethi Asrani, Richa Joshi, George Mariyan, Pavel Navageethan, Dhileepan, Nachiyaal Suganthi, Rajive Anand, Kulothungan Udhayakumar

Directed By : Thamizh

Music By : Govind Vasantha

Produced By : Reel Good Films - Aditya

 

மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன், இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் நாயகன் விஜய்குமாருக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை என்றாலும் தனது உறவினரின் தூண்டுதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அப்பாவின் பேச்சையும் மீறி விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க, அதன் மூலம் அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து விஜய்குமார் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, இல்லையா? என்பது தான் ‘எலக்சன்’.

 

நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், இளம் அரசியல்வாதியாக எதார்த்தமான நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார். கோபம், காதல், தந்தை மீதான பாசம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் என்றாலும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகிகளாக நடித்திருக்கும் ரிச்சா ஜோஸி மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதை அவர் சரியாக பயன்படுத்தி நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

 

நாயகனின் தங்கை கணவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், கனி என்ற கதாபாத்திரத்தில் பல விதங்களில் நடித்து கவனம் ஈர்க்கிறார். அவரை சுற்றி எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், தனது நடிப்பால் பார்வையாளர்களை தன் வசம் இழுத்துவிடுகிறார்.

 

கடைசி வரை கட்சிக்காகவே உழைக்கும் உண்மையான தொண்டர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக களம் இறங்கியிருக்கும் திலீபன், நாஞ்சியால் சுகந்தி, ரஜீவ் ஆனந்த், குலந்துங்க உதயகுமார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, இதுவரை பார்க்காத லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். வேலூர் மாவட்டத்தையும், மக்களையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அதிலும், அந்த தேர்தல் பாடல் தனி ரகம். பின்னணி இசை அளவு.

 

’சேத்துமான்’ படம் மூலம் சாதி பிரிவினைவாதத்தை பற்றியும், உணவு அரசியல் பற்றியும் பேசிய இயக்குநர் தமிழ், உள்ளாட்சி தேர்தலை கருவாக வைத்துக்கொண்டு அரசியலையும், அதன் பின்னணியையும் எளிமையாக சொல்லி சாமானியர்களையும் கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

 

இங்கு அரசியல் என்பதன் அர்த்தம் எப்படி எல்லாம் மாறுபடுகிறது என்பதை படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்கள் மூலமாக தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் தமிழ், அரசியலும், தேர்தலும் எதற்காக என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.

 

இயக்குநர் தமிழ், அழகிய பெரியவன், விஜய்குமார் ஆகியோரது வசனங்கள் அனைத்தும் அனல் தெறிக்கும் விதத்தில் அமைந்து, திரைக்கதைக்கு பலமாக பயணப்பட்டிருக்கிறது. 

 

நமக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம், என்று நினைப்பவர்களுக்கு கூட அரசியலோடு சம்மந்தம் இருக்கிறது, என்ற உண்மையை படம் முழுவதும் சொல்லியிருக்கும் இயக்குநர் தமிழ், உள்ளாட்சி தேர்தலின் அரசியலை அப்பட்டமாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘எலக்சன்’ தேர்தல் திருவிழா மட்டும் அல்ல அரசியல் பாடம்.

 

ரேட்டிங் 4/5