Dec 14, 2023 06:18 PM

’ஃபைட் கிளப்’ திரைப்பட விமர்சனம்

1ce9ca7e2875fac0630800f1b763f97e.jpg

Casting : Vijay Kumar, Monisha Mohan Menon, Kaarthikeyan Santhanam, Shankar Thas, Avinash Raghudevan, Saravanavel, jeyaraj, Vadachennai Anbu

Directed By : Abbas A.Rahmath

Music By : Govind Vasantha

Produced By : Reel Good Films and G Squad - Aditya and Lokesh Kanagaraj

 

குத்துச்சண்டை வீரரான கார்த்திகேயன் சந்தானம், தன் பகுதி இளைஞர்களையும், சிறுவர்களையும் விளையாட்டு வீரர்களாக்க ஆசைப்படுகிறார்.  அதன்படி, நாயகன் விஜய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் சந்தானத்தின் பாதையில் பயணிக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக சிறுவர்களையும், இளைஞர்களையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி, அவர்களை வைத்து கஞ்சா விற்பனையை செய்து வரும் சங்கர் தாஸ்,  தனது தொழிலுக்கு எதிராக இருக்கும் கார்த்திகேயன் சந்தானத்தை அழிக்க திட்டம் போடுகிறார். இதற்கிடையே, சங்கர் தாஷுடன் இணைந்து கஞ்சா தொழிலில் ஈடுபடும் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ், சங்கர் தாஷுடன் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை கொலை செய்து விடுகிறார். 

 

அவினாஷ் சிறைக்கு போக, மறுபக்கம் சங்கர் தாஷ் லோக்கல் அரசியல்வாதியாக வளர்ந்து அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். சங்கர் தாஸால் ஏமாற்றப்பட்ட அவினாஷ், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை பழிவாங்க நினைக்கிறார். அதற்காக நாயகன் விஜய் குமாரை பகடை காயாக பயன்படுத்த, அதன் பிறகு என்ன நடந்தது?, விளையாட்டு வீரராக நினைத்த நாயகன் விஜய் குமாரின் வாழ்க்கை திசை மாறியதா?, இல்லையா? என்பதை நொடிக்கு நொடி அடிதடி என்ற ரீதியில் சொல்வது தான் ‘ஃபைட் கிளப்’.

 

’உறியடி’ படம் மூலம் ஆக்ரோஷமான இளைஞராக கவனம் ஈர்த்த விஜய் குமார், அதே பாணியிலான ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் அதே ஆக்ரோஷத்தோடு களம் இறங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கடுமையாக உழைத்திருப்பவர், கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக தன்னை வருத்திக்கொண்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. 

 

வில்லனாக நடித்திருக்கும் சங்கர் தாஸ், குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கும் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக இருப்பதோடு, கச்சிதமான நடிப்பு மூலம் காட்சிக்கு காட்சி கவனம் பெறுகிறார்கள்.

 

முக்கிய கதாபாத்திரங்களை தாண்டி, படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் வருகிறார்கள், அனைவரும் புதியவர்கள் என்றாலும் நடிப்பில் அது தெரியவில்லை. அனைவரது நடிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பதோடு, படத்தில் இருக்கும் அடிதடி பின்னணிக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறார்கள்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் மோனிஷா மோகனும், அவரது கதாபாத்திரமும் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், அவரது காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்திக்காட்டியிருக்கிறது. பேருந்து சண்டைக்காட்சி, கல்லூரியில் நடக்கும் சண்டைக்காட்சி, ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி அடிப்பது, என்று பல வகையான சண்டைக்காட்சிகளை பல கோணங்களில் காட்சிப்படுத்தி கேமரா மூலம் வித்தைக்காட்டியிருப்பவர், கதை நடக்கும் பழவேற்காடு கடற்கரை பகுதிகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பீஜியம் படத்திற்கு தனி அடையாளத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. பழைய பாடல்கள் மற்றும் அதன் பின்னணி இசையை மிக சரியாக பயன்படுத்தி ரசிக்க வைத்திருப்பவர், “யாரும் காணாத...” பாடலை திரும்ப திரும்ப கேட்க வைத்திருக்கிறார்.

 

போதைப் பொருள் அரசியல் இளைஞர்களை எப்படி சீரழிக்கிறது என்பதை சொல்லும் கதை என்றாலும், வழக்கம் போல் அதை வட சென்னையை களமாக கொண்டு சொல்லப்பட்டிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைப்பு ஆகியவை நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறது.

 

வட சென்னை என்றாலே போதைப் பொருள், அடிதடி, கொலை என்ற வழக்கமான பாணியை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான தீர்வை நோக்கி கதை நகர்ந்திருந்தால் சற்று வித்தியாசப்பட்டிருக்கும். ஆனால், அத்தகைய விசயத்தை யோசிக்காத இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத், காலங்கள் மாறும், மனிதர்கள் மாறுவார்கள், மற்றபடி வேறு எதுவும் மாறாது, என்ற ரீதியில் படத்தை முடித்திருப்பது, ”இதற்காகாகவா இவ்வளவு அடிதடி?” என்று கேட்க வைக்கிறது.

 

வழக்கமான வட சென்னை கதையை, அதே வழக்கமான பாணியில் சொல்லியிருந்தாலும், படத்தின் மேக்கிங் மற்றும் சண்டைக்காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்திய விதம் போன்றவை படத்தை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘ஃபைட் கிளப்’ ஓல்டாக இருந்தாலும், மிரட்டலான மேக்கிங் மூலம் கோல்டாக மின்னுகிறது.

 

ரேட்டிங் 3/5