Feb 11, 2022 05:14 AM

’எஃப்.ஐ.ஆர்’ விமர்சனம்

e4795a4de706a800bdf1dc63a8bd3304.jpg

Casting : Vishnu Vishal, Gautham Vasudev Menon, Reba Monica John, Manjima Mohan, Raiza Wilson, Vignesh Vijayan

Directed By : Manu Anand

Music By : Ashwath

Produced By : VV Studioz -Shubhra, Aryan Ramesh

 

தங்கப்பதக்கம் வென்ற ஐஐடி மாணவரான நாயகன் விஷ்னு விஷால் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் பல கசப்பான சம்பவங்களை எதிர்கொள்கிறார். வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் இடங்களில் கூட அவர் இஸ்லாமியர் என்பதால், மதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் வருத்தமடையும் விஷ்னு விஷால், சாதாரண ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் வேலைக்கு சேருகிறார். அந்த நிறுவனத்துக்கு தேவையான கெமிக்கலை வாங்கும் பொறுப்பு விஷ்னு விஷாலிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக அவர் வெளியூர்களுக்கு சென்று வருகிறார். அதே சமயம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமியர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயல்படுவதோடு, தென்னிந்தியாவில் பல நாசவேலைகளை செய்ய திட்டமிட்டு வரும் தகவல் இந்திய உளவுத்துறைக்கு கிடைக்கிறது. இதையடுத்து அந்த தீவிரவாதி யார்? என்று கண்டுபிடிக்கும் பணியில் உளவுத்துறை தீவிரம் காட்ட, அந்த நேரத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. அந்த நேரத்தில் விஷ்னு விஷால் அங்கிருக்க, அவர் தான் அந்த தீவிரவாதி என்று நினைத்து உளவுத்துறை அவரை கைது செய்கிறது. விஷ்னு விஷால் தான் தீவிரவாதி என்பதற்கு பல ஆதரங்களையும் சேகரித்து வைத்திருக்கும் உளவுத்துறையிடம் தான் நிரபராதி என்று விஷ்னு விஷால் நிரூபித்தாரா இல்லையா, உண்மையான தீவிரவாதி யார், அவரை உளவுத்துறை கண்டுபிடித்ததா இல்லையா, என்பதை விறுவிறுப்பான காட்சிகளோடும், பல திருப்புமுனை சம்பவங்களோடும் சொல்வது தான் ‘எஃப்.ஐ.ஆர்’.

 

இஸ்லாம் என்பது ஒரு மதம், அவர்களும் இந்திய தேசத்துக்காக தங்களது உயிரை கொடுக்கும் தேசப்பற்று உள்ளவர்கள் தான், என்ற கருத்தை கதைக்கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர் மனு ஆனந்த், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை ஹாலிவுட் படத்திற்கு நிகராக அமைத்திருப்பது படத்தின் தனி சிறப்பு.

 

இர்பான் அஹமத் என்ற இஸ்லாமியர் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக தன்னை பொறுத்திக்கொண்ட விஷ்னு விஷால், ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். தனது அம்மா உயிருக்கு போராடும் போது, தன்னை சுற்றியிருக்கும் ஆபத்தை மறந்து மருத்துவனைக்கு செல்பவர், அங்கு வெளிப்படுத்தும் நடிப்பு மற்றும் சிறு சிறு இடங்களில் கூட சிறப்பாக நடித்திருக்கிறார். இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களை மிக சாதாரணமாக கடந்து செல்பவர், விமான நிலையத்தில் தன்னை குற்றவாளியாக பார்க்கும் போது வெகுண்டு எழுவது, பிறகு தன் நிலையை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்பது என படம் முழுவதும் இர்பான் அஹமத் என்ற ஒரு மனிதராகவே வாழ்ந்திருக்கிறார்.

 

ரெபா மோனிகா ஜான், மஞ்சுமா மோகன், ரைசா வில்சன் என படத்தில் மூன்று நாயகிகள். மூன்று பேருக்கும் கதையுடன் பயணிக்கும் முக்கிய வேடத்துடன் நடிக்க கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது. அவர்களும் அதை நன்றாக பயன்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். விஷ்னு விஷாலின் காதலியாக வந்து பிறகு வேறு ஒரு அவதாரம் எடுக்கும் ரெபா மோனிகா ஜான், பாடல் மற்றும் சண்டைக்காட்சி என இரண்டிலும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

 

தேசிய உளவுத்துறை இயக்குநராக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் தோற்றம், நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு அனைத்தும் அந்த கதாப்பாத்திரத்திற்கு அவரை விட்டால் வேறு யாரும் சரியாக வர மாட்டார்கள் என்பதை நிரூபிக்கிறது. நின்ற இடத்தில் இருந்தே பல சம்பவங்களை அசால்டாக கையாள்பவர், மிகப்பெரிய கதாப்பாத்திரத்தை அசால்டாக கையாண்டிருக்கிறார்.

 

விஷ்னு விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் மாலா பார்வதி, உளவுத்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் டாக்டர் காஸி வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் என படத்தில் நடித்திருக்கும் பலர் தமிழ் சினிமாவுக்கு புதிய முகங்களாக இருந்தாலும், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருப்பதோடு, இயல்பாக நடித்து காட்சிகளை ரசிக்க வைக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆக்‌ஷன் உணர்வை ரசிகர்களிடம் கடத்தி செல்லும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இரவு காட்சிகளாகட்டும், ஏரியல் காட்சிகளாகட்டும் அனைத்தையும் கதைக்கு ஏற்றவாறு காண்பித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

அஷ்வத்தின் இசை காட்சிகளோடு நம்மையும் பயணிக்க வைக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் கதையோடு பயணிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் அஷ்வத், சரியான அளவு பின்னணி இசையை கொடுத்து காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறார். 

 

உளவுத்துறை தேடும் தீவிரவாதி யார்? என்ற கேள்வி படத்தின் இறுதி வரை ரசிகர்கள் மனதில் எழுந்துக்கொண்டிருப்பதோடு, தீவிரவாதி இவராக இருப்பாரா? என்று யூகிக்க முடியாதபடி காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே.

 

இஸ்லாமியர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் மனு ஆனந்த், அதை திரை மொழியில் மிக சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக விஷ்னு விஷால் கதாப்பாத்திரம் நல்லவரா, கெட்டவரா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்பவர், இறுதியில் அவர் யார்? என்ற உண்மையை, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட்.

 

படத்தில் நடித்திருக்கும் நடிகர்களை கையாண்ட விதம், சிறிய வேடமாக இருந்தாலும் அவர்களுடைய தோற்றம் நடிப்பு என அனைத்தையும் மிக அளவாக பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் மனு ஆனந்த் ஹாலிவுட் படத்தை பார்க்கும் உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார். 

 

மொத்தத்தில், ‘எஃப்.ஐ.ஆர்’ பிரமிப்பு.

 

ரேட்டிங் 4/5