Oct 14, 2025 06:09 AM

‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

eccaa7898a937cb474614a3ed838a73e.jpg

Casting : Nivas Adithan, Abinay, Aadhvik, Esther

Directed By : Abhishek Leslie

Music By : Jo Costa

Produced By : JRG Productions - N.Jeevanantham

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் ஆன்லைன் ஆஃப் ஒன்றில் கடன் வாங்கும் நாயகன் நிவாஸ் ஆதித்தன், அந்த கடனால் எதிர்பார்க்காத விபரீதத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா ? என்பதை உண்மை சம்பவங்களின் பின்னணியில் அதிர்ச்சிகரமான கற்பனையோடு சொல்வது தான் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’.

 

”ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியானவர் தற்கொலை” என்ற செய்தியை அடிக்கடி படித்துவிட்டு அல்லது தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, சாதாரணமாக கடந்து போவதுண்டு. ஆனால், இந்த படத்தை பார்த்தால் அந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் சில மர்ம மனிதர்களின் தூண்டுதல் ஏன் இருக்க கூடாது ?  என்று நிச்சயம் யோசிக்க வைக்கும்.

 

பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன், கதையின் நாயகனாக உணர்வுப்பூர்வமாக நடித்து, பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க வைத்து விடுகிறார். ஒரே இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு, தனது மன போராட்டங்களை உடல் மொழி மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் நிவாஸ் ஆதித்தன், அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், தனது ஸ்டைலிஷான நடிப்பு மற்றும் வித்தியாசமான குணாதிசயங்கள் மூலம் நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.

 

அபிநய் உதவியாளராக நடித்திருக்கும் ஆத்விக், சிறிய வேடத்தில் நடித்தாலும், வில்லத்தனம், குணச்சித்திரம், நகைச்சுவை, கோபம் என அனைத்தையும் அந்த கதாபாத்திரத்தினுள் புகுத்தி அதை அளவாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

 

நிவாஸ் ஆதித்தனின் மனைவியாக நடித்திருக்கும் எஸ்தர், பொறுப்பற்ற கணவர்களிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போகும் மனைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். இரண்டு காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவரது திரை இருப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

பாடல்கள் தேவையில்லாத திரைக்கதைக்கு பின்னணி இசை தான் முதுகெலும்பு என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கும் இசையமைப்பாளர் ஜோ கோஸ்டா, தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தையும், பரபரப்பையும் அதிகரித்திருக்கிறார்.

 

ஒரே இடத்தில் நகரும் கதை என்றாலும் ஒளிப்பதிவாளர் சபரி, அதை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரே இடம், அதுவும் குறிப்பிட்ட சிறிய இடம், என்ற சவாலான பணியை மிக சாமர்த்தியமாக கையாண்டு ஒளிப்பதிவாளர் சபரி சபாஷ் வாங்கியிருக்கிறார். 

 

ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநரின் மனம் புரிந்து பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரதீப், வசனங்கள் நிரம்பியிருக்கும் காட்சிகளாக இருந்தாலும்,  தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் அபிஷேக் லெஸ்ஸி, உண்மை சம்பவத்தின் பின்னணியில், இப்படியும் இருக்கலாம்!, என்ற அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறார்.

 

ஆன்லைன் சூதாடம் மூலம் பணத்தை இழப்பவர்கள், அதற்காக ஆஃப் மூலம் எளிதாகவும், உடனடியாகவும் கிடைக்கும் கடனை பெற்று, அதை கட்ட முடியாமல் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை மட்டுமே சொல்லாமல், சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் திரைகக்தை மற்றும் வசனங்களை கையாண்டிருக்கும் இயக்குநர் அபிஷேக் லெஸ்ஸி, அத்தனை விசயங்களையும் மூன்று கதாபாத்திரங்கள் மூலம், ஒரே இடத்தில் வைத்து மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

 

எளிதாக மற்றும் உடனடியாக கடன் கொடுக்கும் ஆன்லைன் ஆஃப்-க்கள், கடனை திரும்ப பெற பல்வேறு யுத்திகளை கையாள்வதை சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், அவர்களின் விதிமுறைகளில் ஒன்று மிகவும் அதிர்ச்சிகரமானதாக மட்டும் இன்றி அபாயகரமானதாக இருப்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, அதை இத்தகைய கடன் தற்கொலைகளுடன் முடிச்சுப் போட்டு ஒரு அசத்தலான சைக்கலாஜிகல் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்ஸி.

 

மொத்தத்தில், ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ அசத்தலான சைக்காலாஜிகல் விளையாட்டு.

 

ரேட்டிங் 3.8/5