Nov 19, 2021 06:22 AM

‘ஜாங்கோ’ விமர்சனம்

8d6320864e9f5a48eba6e94ff284731e.jpg

Casting : Satheesh Kumar, Mirnalini, Karunakaran, Velu Prabhakaran, Hareesh Peradi

Directed By : Mano Karthikeyan

Music By : Ghibran

Produced By : Thirukumaran Entertainment and Zen Studios

 

‘டைம் லூப்’ என்ற அறிவியல் அம்சத்தை மையப்படுத்தி வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு ‘ஜாங்கோ’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

 

ஒரே நாள் திரும்ப திரும்ப நடக்கும், டைம் லூப் என்ற பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன், அதனால் பல்வேறு குழப்பங்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார். பிறகு அதே பிரச்சனையை வைத்து தன்னை சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பவர், தன் மனைவிக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த ஆபத்தில் இருந்து தனது மனைவியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நாயகன், அதை எப்படி செய்கிறார்?, அவருக்கு இந்த டைம் லூப் பிரச்சனை ஏற்பட காரணம் என்ன? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘ஜாங்கோ’ படத்தின் கதை.

 

டைம் டிராவல் மற்றும் டைம் மிஷன் போன்ற அறிவியல் சார்ந்த கற்பனை கதைகள் பல வந்திருந்தாலும், இந்திய சினிமா இதுவரை அறியாத டைம் லூப் என்ற அறிவியல் அம்ஷத்தை களமாக கொண்டு இயக்குநர் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

 

முழு திரைப்படத்தையும் தன் தோள் மீது சுமக்கும் நாயகன் சதீஷ் குமார், முதல் பட நடிகராக அல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகரைப்போன்று நடித்துள்ளார். காதல், குழப்பம், கோபம், அதிர்ச்சி, என ஏகப்பட்ட உணர்வுகளை மிக கச்சிதமாக வெளிப்படுத்தி, அந்த கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைக்கிறார். ஒரே காட்சி திரும்ப திரும்ப வந்தாலும், அந்த காட்சிகளில் உடைகளில் மட்டும் இன்றி தனது நடிப்பிலும் வேறுபாட்டை காண்பிக்கும் சதீஷ் குமார், ஒரு நடிகராக மிக கடுமையாக உழைத்திருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, ஆங்காங்கே கிடைக்கும் வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை நிரூபிக்க பெரிதும் முயற்சித்திருக்கிறார்.

 

கருணாகரன், ரமேஷ் திலேக் ஆகியோர் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. இயக்குநர் வேலு பிரபாகரன், ஹரிஷ் பேரடி ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.

 

கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், சான் லோகேஷின் படத்தொகுப்பும் குழப்பம் இல்லாமல் படத்தை நகர்த்தி செல்கிறது. ஒரே காட்சி திரும்ப திரும்ப வந்தாலும், வெவ்வேறு கோணங்களில் அந்த காட்சியை படமாக்கி கவனிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

 

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு, காட்சிகளை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்ல பெரிதும் உதவியிருக்கிறது.

 

ஒரு நாள் திரும்ப திரும்ப நடப்பது தான் ‘டைம் லூப்’. அதாவது, காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அடுத்த நாளும் அதே நிகழ்வு நடைபெறும். இத்தகைய ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும், என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் மனோ கார்த்திகேயன், டைம் லூப் என்பதை மிக கவனமாக கையாண்டிருப்பதோடு, படம் பார்க்கும் அனைவரும் அதை எளிதில் புரிந்துக்கொள்ளும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

ஒரே காட்சி திரும்ப திரும்ப இடம்பெற்றாலும், படம் பார்ப்பவர்கள் சலிப்படையாதபடி காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர், அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு முழு படத்தையும் பார்க்க வைக்கிறார். வித்தியாசமான சிந்தனையாக இருந்தாலும், அதை வழக்கமான சினிமா ஃபார்முலாவில் மிக சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மனோ கார்த்திகேயனின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், எந்த ஒரு காட்சியையும் தவறவிடாமல் முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு ‘ஜாங்கோ’ நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

 

ரேட்டிங் 3.5/5