Sep 13, 2025 07:40 AM

’காயல்’ திரைப்பட விமர்சனம்

449e9e70dabeb7fb4f2561f716a39eb7.jpg

Casting : Anumol, Lingesh, Gayathri, Swagatha, Isac Varghees, Ramesh Thilak

Directed By : Dhamayanthi

Music By : Justin

Produced By : J Studios - Jesu Sundaramaran

 

வெவ்வேறு சாதியை சேர்ந்த லிங்கேஷும், காயத்ரியும் காதலிக்கிறார்கள். சாதி பாகுபாட்டால் காதலுக்கு காயத்ரியின் தாய் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு தனது சொந்தத்தில் கட்டாய திருமணம் செய்து வைக்கிறார். திருமணமான சில நாட்களில் காயத்ரி தற்கொலை செய்து கொள்கிறார். மகளின் தற்கொலையால் அந்த குடும்பம் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறது, என்பதை கவிதை போல் சொல்வதே ‘காயல்’.

 

சமூகப் போராளி மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைஞராக கதாபாத்திரத்திற்கு ஏற்ப லிங்கேஷ் நடித்திருக்கிறார். காதல் தோல்வி, காதலியின் மரணம், மற்றொரு காதலை ஏற்பதில் தடுமாற்றம் என்று பலவிதமான உணர்வுகளை அளவாக கையாண்டு பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி, எளிமையான அழகோடு வலம் வந்தாலும், கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் நடித்து, பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாகதா, கண்களினாலேயே பேசுகிறார். துறுதுறுவென்ற அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

 

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், பெண்களிடம் இருக்கும் சாதி வெறியையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தனது நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

நாயகியின் தந்தையாக நடித்திரும் ஐசக் வர்கீஸ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

 

மனநல மருத்துவராக நடித்திருக்கும் ரமேஷ் திலக் கதாபாத்திரம் மூலம், சாதி நோய் பிடித்தவர்களுக்கு இயக்குநர் மருத்துவம் பார்க்க முயற்சித்திருக்கிறார்.  அதற்கு ரமேஷ் திலக்கின் இயல்பான நடிப்பு சிறந்த முறையில் கைகொடுத்திருக்கிறது.

 

கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கார்த்திக், திரையில் பெரிதாக தெரியாத காதலை பார்வையாளர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகளை உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறார்.

 

ஜஸ்டினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

சாதி பாகுபாட்டினால் காதலை எதிர்ப்போரை சிந்திக்க வைக்கும் வகையில் எழுதி இயக்கியிருக்கும் தமயந்தி, பிரச்சாரமாக அல்லாமல் திரை மொழியில் காதல் உணர்வுகளையும், சாதியால் அந்த காதல் பலியாகும் வலியையும் மிக நேர்த்தியாக சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

 

மொத்ததில், ‘காயல்’ சாதியால் சாகும் காதலின் வலி.

 

ரேட்டிங் 3/5