Oct 25, 2019 06:43 PM

‘கைதி’ விமர்சனம்

828d372da31f0a9c00c982513a4f9a68.jpg

Casting : Karthi, Naren, Dheena, Harish Uthaman, Ramana

Directed By : Logesh Kanakaraj

Music By : Sam CS

Produced By : Dream Warrier Pictures SR Prabhu

 

தரமான கதைகளை தேர்வு செய்வதோடு, அதை மக்களுக்குப் பிடிக்குமாறு ஜனரஞ்சகமான திரைப்படமாகவும் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில், ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், வித்தியாசமான களங்களில் துணிந்து நடித்து வரும் கார்த்தியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கைதி’, இவர்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றியதா, இல்லையா என்பதை பார்ப்போம்.

 

கார்த்தி என்ற நடிகரின் ரசிகர்கள், வித்தியாசமான படங்களை விரும்பும் சினிமா ரசிகரகள் மற்றும் யார் நடித்தால் என்ன, படம் பார்க்கும் இரண்டரை மணி நேரம் போனதே தெரியாதவாறு எண்டர்டெயின்மெண்ட் பண்ணக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள், இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் படம் தான் ’கைதி’.

 

10 வருட சிறை தண்டனைக்குப் பிறகு, அனாதை இல்லத்தில் இருக்கும் தனது மகளைப் பார்க்க செலும் போது, மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும் கார்த்தி, அதில் இருந்து மீண்டு தனது மகளை பார்த்தாரா அல்லது அதில் மாண்டுப்போனாரா, என்பதை தான் இயக்குநர் விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்.

 

காவல் துறைக்கும், போதை மருந்து கடத்தல் மாபியா கும்பலுக்கும் இடையே நடக்கும் யுத்தம், அதன் நடுவே சிக்கும் கார்த்தி, ஒரு கண்ணில் மகளைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்போடும், மறு கண்ணில் தன்னை நம்பியவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற வெறியுடனும் டெல்லி என்ற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார். ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அதனுடனே பயணிக்கும் செண்டிமெண்டை ரசிகர்களும் பீல் பண்ணுகிறார்கள் என்றால் அது கார்த்தியின் நடிப்பால் மட்டுமே. படம் முழுவதுமே ஆக்‌ஷன் என்றாலும், அதையும் தாண்டி படத்தில் இருக்கும் அப்பா - மகள் செண்டிமெண்டை ரொம்ப அழகாகவே கார்த்தி தனது நடிப்பு மூலம் ரசிகர்களிடம் சேர்ப்பதோடு, அவரது ரசிகர்களை முழு திருப்திப்படுத்தும் அளவுக்கு சில இடங்களில் மாஸ் பர்பாமன்ஸையும் கொடுத்திருக்கிறார்.

 

ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி வேடத்தில் படம் முழுவதும் வரும் நரேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லாக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், அவரது தம்பியாக நடித்திருக்கும் அர்ஜுன் மட்டும் இன்றி, கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து கமிஷ்னர் அலுவலகத்தை காக்கும் பணியில் இறங்கும் ஜார்ஜும் மனதில் நிற்கிறார்.

 

கதை என்ன என்பது படம் தொடங்கி 20 நிமிடத்திலேயே நமக்கு இயக்குநர் சொல்லிவிட்டாலும், அதை எப்படி முடிக்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பை மிகப்பெரிய அளவில் திரைக்கதை ஏற்படுத்துவதோடு, அடுத்து என்ன நடக்கும், என்ற சிந்தனை படம் முடியும் வரை நம் மனதுக்குள் ஓடிகொண்டே இருக்கிறது.

 

படத்தில் பாடல்கள் இல்லை, காமெடி நடிகர்களின் டிராக் இல்லை, கதாநாயகி இல்லை என்பது போல படத்தில் ஒரு இடத்தில் கூட தொய்வும் இல்லை. படம் ஆரம்பிக்கும் போது திரையை உற்று நோக்கும் நம் கண்கள், படம் முடியும் வரை திரை இருக்கும் திசையை தவிர வேறு எந்த திசையிலும் பார்க்காதவாறு, படம் நமது கண்களை கைது செய்துவிடுகிறது.

 

ஒரு இரவில் நடக்கும் கதை என்பதால் படம் முழுவதுமே இருட்டு மட்டும் தான் என்றாலும், அது குறித்து நாம் யோசிக்காத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஷாம் சி.எஸ்-இன் பின்னணி இசை காட்சிகளோடு பின்னி பினைந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் வரும் மிகப்பெரிய துப்பாக்கி சத்தத்தை கூட நாம் கவனித்து, உணரும் வகையில் பின்னணி இசையை துள்ளியமாக கையாண்டிருக்கிறார். படத்தில் இருக்கும் விறுவிறுப்பு குறையக்கூடாது. அதே சமயம் கார்த்தியின் பின்னணியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், என்ற இயக்குநரின் சவாலை படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் சாமார்த்தியமாகவே சமாளித்து, எந்த இடத்திலும் படம் பார்ப்பவர்களை குழப்பாமல் காட்சிகளை கட் செய்திருக்கிறார்.

 

நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் வேலை, இவை இரண்டையுமே தனது கதைக்களத்தோடு சம அளவில் பயணிக்க வைத்து, படத்தை கச்சிதமாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சாதாரண கதையை ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கிறார்.

 

படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும், அவற்றை வெறும் ஆக்‌ஷன் காட்சிகள் என்று ஒதுக்கிவிடாமல், பிரமித்து பார்க்ககூடிய விதத்தில், திரைக்கதையின் வேகத்திற்கான காட்சிகளாக கையாண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முழுமையான விஷுவல் ட்ரீட்டாக இப்படத்தை கொடுத்திருக்கிறார் என்றால், அது மிகையாகாது.

 

மொத்தத்தில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இரண்டரை மணி நேரம் கட்டிப்போட்டுவிடுகிறார் இந்த ‘கைதி’

 

ரேட்டிங் 4.5/5