Nov 25, 2021 11:40 AM

’மாநாடு’ விமர்சனம்

4feb1881ef4a2efe8b584e89c5b8725e.jpg

Casting : Silambarasan, SJ Surya, Kalyani, SA Chandrasekar, YG Mahendra, Premji

Directed By : Venkat Prabhu

Music By : Yuvan Shankar Raja

Produced By : Suresh Kamatchi

 

ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்துக்கொண்டிருப்பதை தான் ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் முதல் முறையாக கடந்த வாரம் ‘ஜாங்கோ’ என்ற தமிழ்ப் படம் வெளியாகியிருந்தது. தற்போது இதே டைம்-லுப்பை பயன்படுத்தி  ‘மாநாடு’ படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

 

டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன், அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரை காப்பாற்றும் முயற்சியில் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘மாநாடு’ படத்தின் கதை.

 

குறிப்பிட்ட சில சம்பவங்களை திரும்ப திரும்ப காட்டும் போது, ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுவதோடு, சில நேரங்களில் பெரும் குழப்பமும் ஏற்படும். ஆனால், இவை இரண்டும் எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு ஏற்படாத வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

 

சிம்புவின் திரை வாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பது உறுதி. தன்னை முன்னிலை படுத்தாமல், கதை மற்றும் கதைக்கு தேவையான கதாப்பாத்திரங்களோடு சேர்ந்து பயணித்திருக்கும் சிம்பு, ஒரு நடிகராக கொடுத்த கதாப்பாத்திரத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. அதே சமயாம், தனது ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் நடித்திருக்கிறார்.

 

படத்தில் வில்லனாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு ஹீரோவாகவே வலம் வருகிறார். அவர் வரும் காட்சிகளில் அனல் பறக்க, திரையரங்கு முழுவதும் கைதட்டல் மற்றும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. ஒரு வசனத்தை பல வகையான உச்சரிப்பிலும், அதற்கு பல வகையான உடல் அசைவுகளையும் கொடுத்து தன்னை ஒரு நடிப்பு ராட்சசனாக வெளிக்காட்டியிருக்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு குறைவான வேலையாக இருந்தாலும், படம் முழுவதும் வருகிறார்.

 

முதல்வர் வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதி, பிரேம்ஜி ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரே ஒரு பாடல் என்றாலும், அந்த பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது. பாடல்கள் இல்லாத குறையை தனது பின்னணி இசை மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் யுவன். காட்சிக்கு காட்சி வித்தியாசமான பின்னணி இசைகளை வழங்கி. அவரை அடிக்கடி நாம் நினைத்துக் கொள்ள செய்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம்.நாதன், ரொம்ப ஸ்டைலிஷாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார். மாநாடு நடக்கும் காட்சியை பிரமாண்டமாகவும், இயல்பாகவும் படமாக்கியிருப்பவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் பிரவீன் கே.எல், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு வலது கையாக செயல்பட்டிருக்கிறார். படம் எந்த இடத்திலும் போராடிக்காத வகையில் காட்சிகளை கச்சிதமாக கையாண்டிருப்பவர், இடைவேளைக்குப் பிறகு ஜெட் வேகத்தில் படத்தை பயணிக்க வைத்திருக்கிறார்.

 

படத்தில் சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பதும், படத்தின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படும் வகையில் இருப்பதும் படத்தின் சிறு குறைகளாக இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கு இடையே அந்த குறை காணாமல் போய்விடுகிறது.

 

அறிவியல் தொடர்பான கருவை வைத்துக்கொண்டு பக்கா கமர்ஷியலாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, எந்த இடத்தில் எந்த விஷயத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார். குறிப்பாக, இடைவேளையின் போது வைத்திருக்கும் ட்விஸ்ட் யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, படத்தை சீட் நுணியில் உட்கார்ந்து ரசிக்கவும் வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘மாநாடு’ மாபெரும் வெற்றி பெற முழு தகுதியுடைய படம்.

 

ரேட்டிங் 4.5/5