May 20, 2023 06:18 PM

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்பட விமர்சனம்

a6da226edc5ff546337b35402b4b07b3.jpg

Casting : Varalaxmi Sarathkumar, Arav, Santhosh prathap, Mahat Raghavendra, Yasar, Vivek Rajagopal, Amit Bharghav, Subramanya Siva,Yash Shetty, Ravi Venkatraman, Shruthi Nayak, Joe Simon, Balaji, Chandra chud

Directed By : Dayal Padmanabhan

Music By : Manikanth Kadri

Produced By : Dayal Padmanabhan for D PICTURES

 

மாருதி நகர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றும் வரலட்சுமி சரத்குமார், தனது நண்பர்கள் சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால் ஆகியோருடன் சேர்ந்து மாருதி நகர் காவல் நிலைய ஆய்வாளரை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், அவருடைய திட்டத்திற்கு திடீரென்று இடையூறு ஏற்பட, அதை சமாளித்து தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வரலட்சுமி சரத்குமார் காத்திருக்கிறார். அவர் போட்ட திட்டத்தின்படி காவல் நிலைய ஆய்வாளர் கொலை செய்யப்படுவதோடு, அவரை சந்திக்க வந்த பிரபல ரவுடியும் கொலை செய்யப்படுகிறார். தான் போட்ட திட்டத்தின்படி கொலை நடந்தாலும், அதை செய்தது யார்? என்று வரலட்சுமி குழப்பமடைய, மறுபக்கம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கை உயர் காவல்துறை அதிகாரி ஆரவ் விசாரிக்கிறார்.

 

ஆரவின் விசாரணையில் குற்றவாளி சிக்கினாரா? இல்லையா?, வரலட்சுமியும், அவரது நண்பர்களும் ஆய்வாலரை கொலை செய்ய திட்டம் போட்டது ஏன்? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனின் மீதிக்கதை.

 

கதையின் நாயகியாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும் ஒரே மாதிரியாக நடிப்பது சலிப்படைய செய்கிறது. வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதோடு, அவருக்கு அந்த வேடம் கச்சிதமாக பொருந்தினாலும், அந்த கதாபாத்திரத்திற்கான வலிமை இந்த படத்தில் இல்லை. ஏதோ ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறவரை கதையின் நாயகியாக திணித்திருக்கிறார்கள்.

 

படத்தின் நாயகன் என்றால் அது ஆரவ் தான். ஆனால், அவரே இடைவேளையின் போது தான் வருகிறார். இருந்தாலும், அவருடைய ஸ்கிரீன் பிரஷன்ஸ் மற்றும் கதாபாத்திரத்தை கையாண்ட விதம் என்று அனைத்து விதத்திலும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். போலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆரவ், நடிப்பிலும் கம்பீரத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான நிரந்தர இடத்தை பிடிக்க கூடிய தகுதி ஆரவுக்கு இருக்கிறது.

 

’சார்பட்டா பரம்பரை’ போன்ற படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், இப்படி ஒரு வேடத்தில் நடித்ததற்காக அவருக்கு இயக்குநர் ஆயிரம் கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது.

 

வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, விவேக் ராஜகோபாலன், யாசர், அமித் பார்கவ் என படத்தில் நடித்த அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

இசையமைப்பாளர் மணிகாந்த் கத்ரி இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணித்திருப்பதோடு காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் தயாள் பத்மநாபன், ‘கொன்றால் பாவம்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது தமிழ் படத்தையும் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கிறார்.

 

எளிமையான கருவை வைத்துக்கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைக்கதை அமைத்த இயக்குநர் தயாள் பதமநாபனின் எழுத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஆனால், அதை சினிமாவுக்கான காட்சியாக வடிவமைத்ததில் அவர் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்திருக்கிறார்.

 

ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் பிரபல ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு அந்த காவல் நிலையம் மட்டும் இன்றி ஒட்டு மொத்த நகரமே எப்படி ஒரு பரபரப்புக்கு ஆளாகும் என்பதையும், அதன் பிறகு நடக்கும் காட்சிகள் விறுவிறுப்பின் உச்சத்தில் இருக்கும் என்பதையும் துளி கூட யோசிக்காமல் ஏதோ மேடை நாடகம் போடுவது போல் படத்தை இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன், தான் இயக்குநர் என்பதை விட ஒரு தயாரிப்பாளர் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், சஸ்பென்ஸ் இல்லாத ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தான் இந்த ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’

 

ரேட்டிங் 2.5/5