‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்பட விமர்சனம்
Casting : Ananth, Bhavani Sri, VJ Vijay, Irfan, Kumaravel, Vishalini, Leela, Wilspat, Dev, KPY Bala, Monica, RJ Anandhi, Sabarish, Thangadurai, Director Venkat Prabhu, Aishwarya.M
Directed By : Ananth
Music By : AH Kaashif
Produced By : Masala Popcorn and White Feather Studios - Aishwarya.M and Sudha.R
சிறு வயதில் இருந்து ஒன்றாக இருக்கும் நாயகன் ஆனந்தும் அவரது நண்பர்களும் கல்லூரி படிப்பை முடித்த பிறகும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக ஆனந்தின் ஐடியாவை கேட்டு அனைவரும் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாமல் போவதோடு, அதன் மூலமாக நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்தும் விடுகிறார்கள். நண்பர்களை பிரிந்து வெகு தூரம் சென்றுவிடும் ஆனந்த், தனது ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதிக்க வேண்டும், என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா?, அவர் மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாதித்தாரா? என்பது தான் படத்தின் கதை.
நாயகன் ஆனந்தின் அப்பாவாக நடித்திருக்கும் குமரவேல், அம்மாவாக நடித்திருக்கும் விஷாலினி, பாட்டியாக நடித்திருக்கும் குல்லபுலி லீலா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் நடிப்பாக இல்லாமல் இயல்பாக பயணிக்க வேண்டும் என்று முயற்சித்திருப்பதோடு, அதற்காக பல படங்களை பார்த்து காப்பியடித்திருப்பது அனைவரது நடிப்பிலும் தெரிகிறது.
சில காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப், தன்னை காட்டிலும் தனது உறவினர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை பெரிதும் நம்பி பயணித்திருக்கிறார். சில இடங்களில் இடம்பெற்றாலும் ரஹ்மானின் இசை நினைவில் நிற்பது போல் காஷிப்பின் இசை இல்லை என்பது பெரும் ஏமாற்றம்.
ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன், இயக்குநர் கை காட்டிய இடங்களில் கேமராவை வைத்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் கதை எழுதி இயக்கியிருக்கிறார். நண்பர்களையும், நட்பையும் களமாக கொண்டு காதல், பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் புரிதல், நகைச்சுவை ஆகியவற்றை சேர்த்து ஒரு ஜாலியான கமர்ஷியல் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
‘7ஜி ரெயின்போ காலனி’, ‘சென்னை 28’ போன்ற படங்களின் பாதிப்பால் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் ஆனந்த் வடிவமைத்திருக்கிறார் என்பது படம் முழுவதும் தெரிகிறது. மற்ற படங்களால் பாதிக்கப்பட்டு திரைக்கதை எழுதுவது தவறில்லை என்றாலும், அதை சுவாரஸ்யமாகவும், இளைஞர்களுக்கு ஏற்றபடியும் சொல்லாமல் சொதப்பியிருப்பது இயக்குநர் ஆனந்தின் மிகப்பெரிய தவறு.
மொத்தத்தில், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ புதிதாக ஒன்றும் இல்லை.
ரேட்டிங் 2.5/5