Jan 04, 2022 07:07 AM

’ஓணான்’ விமர்சனம்

25970867e4ca9c4b64f2d7efbde96d9e.jpg

Casting : Thirumurugan Sadasivam, Shilpa Manjunath, Poo Ram, Kali Venkat, Singam Puli, Shakthi Saravanan

Directed By : Sennan

Music By : Antony Abraham

Produced By : Elephant Fly Entertainment - Renjith Kumar PR

 

பழிவாங்கும் நோக்கத்தில் பூ ராமின் குடும்பத்தில் நுழையும் நாயகன் திருமுருகன் சதாசிவத்திற்கு தனது மகள் ஷில்பா மஞ்சுநாத்தை திருமணம் செய்து வைக்கிறார் பூ ராம். திருமணம் முடிந்த பிறகு திருமுருகன் பற்றிய அதிர்ச்சி பின்னணியை அறிந்துக்கொள்ளும் பூ ராமின் மகன் காளி வெங்கட், அந்த தகவலை தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் திருமுருகனை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

 

இறுதியில் யார் யாரை கொலை செய்தார்கள், என்பதோடு, பூ ராமின் குடும்பத்தாரை திருமுருகன் பழிவாங்க துடிப்பது ஏன்?, அவரது அதிர்ச்சி பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு, யாரும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை சம்பவம் மூலம் பதிலளித்திருப்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் திருமுருகன் சதாசிவம், ஆறடி உயரம், ஆக்ரோசமான முகம் என்று படத்தின் முதல் பாதி முழுவதும் பயமுறுத்துகிறார். இரண்டாம் பாதியில் அவர் வாழ்க்கை பின்னணி தெரிந்த பிறகு உயரத்தில் மட்டும் இன்றி உள்ளத்திலும் உயர்ந்த மனிதராகிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருந்தாலும், சில இடங்களில் கிராமத்து பெண் வேடத்தில் பொருந்த முடியாமல் தவித்திருப்பது தெரிகிறது.

 

தந்தை வேடத்தில் நடித்திருக்கும் பூ ராம் எப்போதும் போல தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதாப்பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். 

 

காமெடி கதாப்பாத்திரமாக அறிமுகமாகும் காளி வெங்கட், பிறகு குணச்சித்திர வேடமாக பயணித்து இறுதியில் அதிர்ச்சியளிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

 

சிங்கம் புலியின் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் சனுஜா சோம்நாத், சரவணன் சக்தி, ஷர்மிளா என அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ராஜேஷ் ராமனின் ஒளிப்பதிவு கிராமத்து காட்சிகளை அழகாக காட்டியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளது.

 

ஆண்டனி ஆப்ரகாம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருப்பதோடு, பின்னணி இசையிலும் பாடல்கள் முன்னிலைப்படுத்தப் பட்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

”மறப்பது மனித இயல்பு, மன்னிப்பது இறை இயல்பு” என்ற வாக்கியத்தை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சென்னன், போதை பழக்கத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும், சபலம் ஒரு மனிதனை எத்தகைய குற்றம் செய்ய வைக்கிறது என்பதையும், ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருக்கிறார்.

 

திருமுருகனின் பின்னணி என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு முதல் பாகத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர், இரண்டாம் பாகத்தில் காளி வெங்கட்டின் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், இறுதிக் காட்சி மூலம் ரசிகர்களை கைதட்ட வைத்து விடுகிறார்.

 

மொத்தத்தில், ‘ஓணான்’ மனிதர்கள் பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல கற்க வேண்டிய பாடமும் கூட.

 

 

3.5/5