Jan 11, 2021 11:43 AM

’பச்சைக்கிளி’ விமர்சனம்

c29e9319cb63301de4550d877c272f9c.jpg

Casting : Gypsy Rajkumar, Hema, Muthukkalai, Nellai Siva

Directed By : Sri Sai MK Selvam

Music By : Selva Nambi

Produced By : LK Productions

 

கதாநாயகன் ஜிப்ஸி ராஜ்குமார், தனது மாமன் மகளான கதாநாயகி ஹேமாவை விரும்புகிறார். ஆனால், கதாநாயகியோ வேறு ஒருவரை விரும்புகிறார். கதாநாயகியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவருடைய தந்தை, ஜிப்ஸி ராஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார். ஜிப்ஸி ராஜ்குமாரை திருமணம் செய்துக் கொண்டாலும், அவரை பிடிக்காமல், அவருடன் வாழ்ந்து வரும் கதாநாயகி தனது முன்னாள் காதலனின் வற்புறுத்தலால் அவருடன் ஓடி விட, அதன் பிறகு கதாநாயகியின் வாழ்க்கை என்ன ஆனது, என்பது தான் படத்தின் கதை.

 

அறிமுக பாடல், காதல் பாடல், ஆக்‌ஷன் காட்சிகள் என கமர்ஷியல் கதாநாயகனாக தன்னை இப்படம் மூலம் நிரூபிக்க ஜிப்ஸி ராஜ்குமார் முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி வரவேற்க வேண்டியது தான் என்றாலும், ரசிகர்கள் அவரை வரவேற்பார்களா? என்பது சந்தேகம் தான். ஆனால், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தால் நிச்சயம் கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களின் பட்டியலில் ஜிப்ஸி ராஜ்குமாருக்கு இடம் உண்டு.

 

பச்சைக்கிளி என்பது கதாநாயகியின் கதாப்பாத்திர பெயர். அவரை சுற்றி தான் கதை நகர்கிறது. ஆனால், படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹேமா தான் மிகப்பெரிய குறையாக இருக்கிறார்.

 

முத்துக்காளை, நெல்லை சிவா ஆகியோர் வாங்கிய சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுடன் நடித்திருக்கும் சில புதுமுகங்களும் தங்கள் தாரால நடிப்பை வாரி வழங்குகிறார்கள். ஆனால், அமிர்தமும் மிஞ்சினால் நஞ்சு என்பது போல சில இடங்களில் அவர்களுடைய நடிப்பும் நம்மை பதம் பார்த்துவிடுகிறது. அதிலும், மைனராக நடித்திருப்பவர், வில்லத்தனத்தை காட்டுகிறேன் என்று, கோமாளித்தனத்தால் நம்மை கொன்று விடுகிறார்.

 

 

கோர்வை இல்லாத காட்சிகள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும், அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இசையும், பாடல்களும் உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கிராமத்து பாடல்களை கேட்ட திருப்தி கிடைக்கிறது. இசையமைப்பாளர் செல்வாநம்பியை தாரளமாக பாராட்டலாம். 

 

ஒளிப்பதிவாளர் ஏ.எஸ்.உதயசங்கரின் கேமரா கதைக்கு ஏற்றவாறும், பட்ஜெடுக்கு ஏற்றவாறும் பயணித்துள்ளது.

 

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படம் எடுக்க நினைப்பவர்களிடம் பட்ஜெட் இருக்காது. மிகப்பெரிய பட்ஜெட்டோடு படம் எடுப்பவர்கள் மக்களுக்காக படம் எடுப்பதில்லை. அந்த வகையில், பல குறைகளோடு இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ சாய் எம்.கே.செல்வம் இயக்கியிருந்தாலும், சமூகத்திற்கு நல்ல கருத்தை, குறிப்பாக பெண்களுக்கு நல்ல பாடமாக இப்படத்தை கொடுத்திருப்பது நிறைவை கொடுக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5