May 24, 2024 06:23 AM

’பகலறியான்’ திரைப்பட விமர்சனம்

6bd472fdbc31c4ee6d8d7ce47d632853.jpg

Casting : Vetri, Akshaya Kandhamudan, Chaplin Balu, Sai Dheena, Murugan, Vinu Priya

Directed By : Murugan

Music By : Vivek Saro

Produced By : Latha Murugan

 

தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் அக்‌ஷயா வீட்டை விட்டு வெளியேறி வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, அவர் தனது  தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெற்றியுடன் பயணிக்கிறார்.

 

மறுபக்கம் ரவுடியான முருகன், வீட்டை விட்டு வெளியேறிய தனது தங்கையை தேடி அலைய, அவரின் எதிரிகள் அவரது தங்கையை கடத்தி வைத்து, அதன் மூலம் அவரை பழிதீர்க்க முயற்சிக்கிறார்கள். ஒருபக்கம் எதிரிகளை சமாலித்தவாறு தங்கையை முருகன் தேடிக்கொண்டிருக்க, மறுபக்கம் வெற்றி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் நபரிடம் பணம் பெறுவதோடு, அக்‌ஷயாவுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். வெற்றியின் இத்தகைய செயலை அறிந்துக்கொண்டு அதிர்ச்சியடையும் அக்‌ஷயா என்ன செய்தார்?, வெற்றி இப்படி செய்ய காரணம் என்ன?, ஆபத்தில் இருக்கும் தங்கையை தேடி அலையும் முருகன் அவரை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை பல திருப்பங்களுடன் சொல்வதே ‘பகலறியான்’.

 

நாயகனாக நடித்திருக்கும் வெற்றி வழக்கம் போல் இறுக்கமாகவே நடித்திருக்கிறார், என்ற குற்றச்சாட்டு இந்த படத்திலும் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் அவர் அல்ல, அவருக்கு கிடைக்கும் கதாபாத்திரம் தான். வெற்றி நாயகன் என்றாலும், அவர் நல்லவரா?, கெட்டவரா? என்ற கேள்வியோடு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும் என்ற இயக்குநரின் சிந்தனையின் பேரிலேயே அவரது கதாபாத்திரம் இறுக்கமாக பயணித்திருக்கிறது. அதனால் தான் வெற்றியும் இறுக்கமாகவே நடித்திருக்கிறார். அதனால், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்த வெற்றியின் மீது எந்தவித குறையும் இல்லை.

 

சைலண்ட் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வசனம் பேசாமல் நடித்திருக்கும் மற்றொரு நாயகன் முருகன், நாயகன் வெற்றிக்கு சவால் விடும் அளவுக்கு இறுக்கமாக நடித்திருக்கிறார். முதல் படம் என்ற அடையாளம் தெரியாதவாறு கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பவர், கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷயா கந்தமுதன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் வினு பிரியா திரைக்கதையின் திருப்பமாக பயணப்பட்டிருக்கிறார்.

 

காமெடி வேடங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு அதிரடியான வேடத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவர் உடம்பு தான் அதிகமாக அதிர்கிறது.  போலீஸாக நடித்திருக்கும் தீனாவின் கதாபாத்திரத்திம் திரைக்கதைக்கு தொடர்பில்லாமல் பயணித்தாலும், காட்சிகளின் இறுக்கத்தில் இருந்து ரசிகர்களை காப்பாற்றுவதற்கு உதவியிருக்கிறது.

 

படம் முழுவதும் இரவு நேரத்தில் நடக்கிறது. ஆனால், அந்த உணர்வே ரசிகர்களிடம் ஏற்படாத வகையில் ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா சுழன்றிருக்கிறது. 

 

விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் குரு பிரதீப், படத்தின் திருப்பங்களை மிக நேர்த்தியாக தொகுத்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

படத்தில் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முருகன், கதை எழுதி இயக்கியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில், ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுக்க வேண்டும் என்ற அவரது முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.

 

ஒரு இரவில் நடக்கும் கதை, அதை எப்படி சுவாரஸ்யமாக சொல்ல வேண்டுமோ, அதை இயக்குநர் முருகன் மிக சரியாக செய்திருக்கிறார். ஒரு பக்கம் வெற்றி, அக்‌ஷயாவின் பயணம், மறுபக்கம் முருகனின் தங்கையை தேடும் பயணம், இவை இரண்டையும் பல திருப்பங்களுடன் ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைப்பதற்காக இயக்குநர் முருகன் மேற்கொண்ட யுக்திகளை சில இடங்களில் யூகிக்க முடிந்தாலும், பல இடங்களில் எதிர்பார்க்காத திருப்பங்களாக இருப்பதோடு, ரசிகர்களை இரண்டு மணி நேரம், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்க வைக்கிறது.

 

“கெட்ட பழக்கம் உள்ளவன் தான், ஆனால் கெட்டவன் இல்லை”, “நான் கெட்டவன் தான், நீ நல்லவன் தானே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே” போன்ற வசனங்கள் மூலம் துணை எழுத்தாளர் விக்னேஷ் குணசேகர் கவனம் ஈர்க்கிறார்.

 

சில விசயங்களை விரிவாக சொல்லப்படாதது உள்ளிட்ட சில குறைகள் படத்தில் இருந்தாலும், தேவையில்லாத விசயங்களை திணிக்காமால் சொல்ல நினைத்ததை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொன்னதில் இயக்குநர் முருகன் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘பகலறியான்’ படத்தை தாராளமாக பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3.5/5