‘பேச்சி’ திரைப்பட விமர்சனம்
Casting : Gayathrie, Bala Saravanan, Preethi Nedumaaran, Dev, Jana
Directed By : Ramachandran.B
Music By : Rajesh Murugesan
Produced By : Veyilon Entertainment - Gokul benoy and Verus Productions - Shaik Mujeeb, Rajarajan, Sanjay Shankar, Dhanishtan Fernando
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங் செல்கிறார்கள். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் வழிகாட்டுவதற்காக அவர்களுடன் செல்கிறார். அவர்கள் செல்லும் வழியில் “இது தடை செய்யப்பட்ட பகுதி” என்ற பலகை ஒன்று இருக்கிறது, அதை பார்த்ததும் நண்பர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் பாலசரவணன், அது ஆபத்தான இடம் என்று எச்சரிக்கிறார். அவரது எச்சரிக்கையையும் மீறி அந்த இடத்திற்குள் நுழையும் நண்பர்கள் எதிர்பார்க்காத பல பயங்கரமான சம்பவங்களை சந்திக்கிறார்கள்.
இது பேச்சியின் செயல் என்பதை அறிந்துக்கொண்டு, எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் பாலசரவணன், அதில் வெற்றி பெற்றாரா?, பேச்சி என்பவர் யார்? என்பதை ரசிகர்கள் அலறும் வகையில் சொல்வதே படத்தின் கதை.
திகில் படங்கள் என்றாலே முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடப்பது போல் தான் இருக்கும். ஆனால், முழுக்க முழுக்க பகலில் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ரசிகர்களை மிரள வைத்திருக்கும் இந்த பேச்சி நீண்ட வருடங்களுக்குப் பிறகு திகில் பட ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக அமைந்திருக்கிறது.
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேரும் தங்களது அச்ச உணர்வை ரசிகர்களிடத்திலும் கடத்தும் விதமாக நடித்திருக்கிறார்கள். அடர்ந்த வனப்பகுதிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தோடு பயணிக்கும் அவர்களது பயணம் ரசிகர்களுக்கு திக்...திக்...அனுபவத்தை கொடுக்கிறது.
காமெடி வேடங்களை கடந்து குணச்சித்திர வேடங்களிலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பாலசரவணன். பழங்குடியினராக எதார்த்தமாக நடித்திருப்பவர், ஆபத்தை நோக்கி பயணிப்பவர்களை தடுத்து நிறுத்த போராடும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும், தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவதற்காக தனது உயிரை அவர் பணயம் வைக்கும் போது, பாலசரவணன் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும், என்று படம் பார்ப்பவர்களை பிரார்த்தனை செய்ய வைக்கிறார். அந்த அளவுக்கு அவரது வெள்ளந்தி நடிப்பும், அவருக்காக காத்திருக்கும் அவரது மகளின் முகமும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது.
பேச்சி கதபாத்திரத்தை வடிவமைத்த விதம், அதில் நடித்திருப்பவருக்கான மேக்கப் மற்றும் அந்த கதாபாத்திரத்தை திரையில் காட்டிய விதம் ஆகியவை படத்தை மற்ற திகில் படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன், கதைக்களத்தை அறிமுகப்படுத்தும் ஆரம்பக் காட்சியிலேயே திரையில் பிரமாண்டத்தை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். படம் பார்ப்பவர்கள் நிச்சயம் இது எந்த இடம்? என்று கேட்பார்கள், அந்த அளவுக்கு புதிய புதிய லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். குறிப்பாக பகல் நேரங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகவே பார்வையாளர்களை பயப்பட வைத்திருக்கும் அவரது கேமரா கோணங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் ஒளிப்பதிவாளருடன் போட்டி போட்டு இசையமைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் மலைப்பகுதி, மேகக்கூட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு தனது பாடல் மூலம் உயிர் கொடுத்திருப்பவர், பின்னணி இசை மூலம் பார்வையாளர்களின் படபடப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
திகில் படங்கள் என்றாலே பின்பற்றப்படும் வழக்கமான பாணியை தவிர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின், பேச்சி என்ற கதாபாத்திரத்தை எந்த அளவுக்கு காண்பித்தால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும், பயமும் இருக்கும் என்பதை சரியாக கணித்து காட்சிகளை வெட்டியிருக்கிறார். அவரது படத்தொகுப்பு பயத்தை ஏற்படுத்துவதோடு, பேச்சி கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடவும் வைக்கிறது.
கலை இயக்குநர் குமார் கங்கப்பன், பேச்சி கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டவர், ஒலி வடிவமைப்பு என தொழில்நுட்ப ரீதியாக படம் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன்.பி, ரசிகர்களின் பல்ஸ் அறிந்து திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ‘ராங் டர்ன்’ போன்ற ஆங்கிலப் படங்களின் பாதிப்பாக இருந்தாலும், அதன் சாயல்கள் தெரியாதவாறு திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பாலச்சந்திரன், நாம் கேள்விப்பட்ட பல பழமையான பேய் மற்றும் அமானுஷ்ய கதைகளை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கையாண்டு திரையில் திகில் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார்.
பாலசரவணனின் எச்சரிக்கையையும் மீறி, ஒரு கூட்டம் உள்ளே சொல்லும் போது கதாபாத்திரங்களிடம் இருக்கும் பதற்றமும், பயமும் படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் வகையில், திகில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் இறுதியில் அத்தனைக்கும் பின்னணியாக சொல்லப்படும் திருப்புமுனை, யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் லாஜிக்கோடும் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு முழுமையான திகில் அனுபவத்தை கொடுக்கும் விதமாக வெளியாகியிருக்கும் இந்த ‘பேச்சி’ நிச்சயம் ரசிகர்களை பேச வைக்கும்.
மொத்தத்தில், இந்த ‘பேச்சி’ பேய் அல்ல என்றாலும், பேயை காட்டிலும் அதிகம் மிரள வைத்து ரசிகர்களை அலற விடுகிறது.
ரேட்டிங் 4.5/5