May 24, 2024 09:21 AM

'PT சார்’ திரைப்பட விமர்சனம்

a837db178b68789961ce97e1c0b2098d.jpg

Casting : HipHop Thamizha Aadhi, Kashmira Pardesh, Anikha Surendar, Thyagarajan, Prabhu, K.Bagyaraj, Ilavarasu, Devadarshini, Vinothini, VJ Vicky, Chutti Aravind, Abi Nakshatra

Directed By : Karthik Venugopalan

Music By : HipHop Thamizha Aadhi

Produced By : Vels Film International - Dr.Isari K.Ganesh

 

கோவை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க மனிதராக இருக்கும் தியாகராஜன் கல்லூரி மற்றும் பள்ளிகளை நடத்தி வருகிறார். அவரது பள்ளியில் P.T வாத்தியாராக பணியாற்றும் நாயகன் ஹிப் ஹாப் ஆதி, கண் முன் என்ன பிரச்சனை நடந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கிப் போகும் பயந்த சுபாவம் கொண்டவர். இதற்கிடையே, ஆதியின் தங்கைப் போன்றவரான கால்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி அனிகாவுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அனிகாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடரும் ஹிப் ஹாதி, அதற்கு காரணமான தியாகராஜனை எதிர்த்து போராட, அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

 

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் போலவே இந்த படத்தையும் சமூக அக்கறையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அந்த பிரச்சனைகளை சமூகம் எப்படி கையாள்கிறது என்பது பற்றி பேசியிருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, வழக்கம் போல் குழந்தைகளையும், பெண்களையும் ஈர்க்கும் விதத்தில் கலகலப்பாக நடித்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகுண்டெழும் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, எங்கு பேச வேண்டுமோ அங்கு மட்டுமே பேசி மற்ற இடங்களில் அடக்கிவாசித்து அப்ளாஷ் பெறுகிறார்.

 

திரைக்கதையின் மையப்புள்ளியாக பயணித்திருக்கும் அனிகாவின் திரை இருப்பு மற்றும் நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. அதிலும், அவர் கதாபாத்திரம் மூலம் படத்தில் இடம்பெறும் திருப்பம் திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களையும், அவர்களது குடும்பத்தாரையும் தண்டிப்பது போன்ற சம்பவங்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தன் இருப்பை வெளிக்காட்டும் விதத்தில் வந்து போகிறார்.

 

கல்வி நிறுவனங்களின் உரிமையாளராக நடித்திருக்கும் தியாகராஜன், இப்படி ஒரு வேடத்தில் தைரியமாக மட்டும் இன்றி மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். 

 

பிரபு, கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, ஒய்.ஜி.மதுவந்தி, சுட்டி அரவிந்த், ஆர்.ஜே.விக்கி, அபிநட்சத்திரா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், இளரவசு மற்றும் தேவதர்ஷினி இருவர் மட்டுமே கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகம். அதிலும் அச்சமில்லை பாடல் சிலிரிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது.

 

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், அதை சமூகம் எப்படி பார்க்கிறது, என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 5 வயது சிறுமி முதல் 50 வயது பெண்கள் வரை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனையை, சக மனிதர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அதற்கான தீர்வை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், படம் பார்க்கும் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார். 

 

முதல்பாதி படம் வேகமாக பயணித்தது போல், இரண்டாம் பாதி படம் பயணிக்கவில்லை என்பது சற்று குறையாக தெரிந்தாலும், இடைவேளைக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் திருப்பம் அந்த குறையை மறக்கடிக்கச் செய்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு புதிய கோணத்தில் குரல் கொடுத்த படமாக கொண்டாட வைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், இந்த 'PT சார்’ விளையாட்டுப் பிள்ளை இல்லை.

 

ரேட்டிங் 3.5/5