Sep 04, 2017 07:42 PM

‘புரியாத புதிர்’ விமர்சனம்

5dcee524a7d7364fb4ca07ba4c814afd.jpg

Casting : விஜய் சேதுபதி, காயத்ரி, மகிமா நம்பியார்

Directed By : ரஞ்சித் ஜெயக்கொடி

Music By : ஷாம் சி.எஸ்

Produced By : ஜே.எஸ்.கே கார்ப்போரேஷன்

இசையமைப்பாளரான விஜய் சேதுபதி, இசை ஆல்பம் வெளியிடுவதற்கான முயற்சியில் இருக்க, நாயகி காயத்ரியை சாலையில் எதர்ச்சியாக பார்க்கும் அவருக்கு அவர் மீது ஈர்ப்பு வந்துவிடுகிறது. காயத்ரி விஜய் சேதுபதி வேலை பார்க்கும் இசைக் கருவிகள் விற்பனை நிலையத்திற்கு வருகிறார். அதன் மூலம் நண்பர்களாகும் விஜய் சேதுபதி - காயத்ரி காதலர்களாகிவிடுகிறார்கள்.

 

இதற்கிடையே, விஜய் சேதுபதியின் நண்பர் ஒருவர் திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாக, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்ள, காயத்ரி அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று விஜய் சேதுபதியின் செல்போனுக்கு வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் சேதுபதி மீள்வதற்குள், காயத்ரி துணிக்கடை ஒன்றின் டிரயல் ரூமில் ஆடை மாற்றும் வீடியோவும் விஜய் சேதுபதியின் செல்போனுக்கு வருகிறது. இப்படி புகைப்படங்கள் வரும் அந்த எண் யாருடையது, என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஜய் சேதுபதி இறங்க, அவரது மற்றொரு நண்பரும் இதுபோன்ற முகம் தெரியாத ஒரு நபர் போலீஸுக்கு அனுப்பிய வீடியோவால் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்படுகிறார்.

 

இந்த விஷயம் காயத்ரிக்கு தெரிந்து தற்கொலை முயற்சிக்க அவரை காப்பாற்றும் விஜய் சேதுபதி, தன்னுடைய வீட்டில் அவரை தங்க வைத்துக்கொள்கிறார். ஆனால், அங்குள்ள பாத்ரூமில் அவர் குளிக்கும் வீடியோ விஜய் சேதுபதியின் செல்போனுக்கு வருவதுடன், அந்த வீடியோ இணையத்தில் ஏற்றாமல் இருக்க, அவரை நிர்வாணமாக சாலையில் நிற்க சொல்கிறது அந்த மர்ம மெசஜ். தனது காதலியின் மானத்திற்காக, அம்மனமாக நிற்க சம்மதிக்கும் விஜய் சேதுபதியை, இப்படி வாட்டி வதைக்கும் அந்த நபர் யார்? அவர் எதற்காக இதை செய்கிறார், என்பது தான் ‘புரியாத புதிர்’ படத்தின் மீதிக்கதை.

 

வித்தியாசமான கதைக்களத்தில் ஹீரோவாக வளர்ந்த விஜய் சேதுபதி தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த படம் மீண்டும் அவரது பழைய பாணி படங்களை நினைவுப்படுத்துகிறது. விஜய் சேதுபதி என்ற நடிகருக்கான கதையாக அல்லாமல், கதைக்கான நடிகராக இந்த படத்தில் விஜய் சேதுபதி பயணித்துள்ளார்.

 

ஆள் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருந்தாலும், முழுப்படத்தையும் தன் வசப்படுத்திக் கொள்ளாமல், மற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில், ரொம்ப அடக்கி வாசித்திருப்பதோடு, தற்போது ரசிகர்கள் அவரிடம் ரசிக்கும் டயலாக் டெலிவரி மற்றும் மேனரிசம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறார்.

 

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களுக்க் தரிசனம் கொடுத்திருக்கும் காயத்ரி, ஹீரோயினுக்கான அட்ராக்‌ஷன் இல்லாமல் இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையாக தோன்றுகிறார். இருந்தாலும், பார்த்ததும் பத்திக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய அழகியாக காயத்ரி தெரியவும் இல்லை, அப்படி அவரை காட்டவும் இல்லை. அதுவும் அவருக்கு புடவை போன்ற காஷ்ட்டியூம் சுத்தமாக எடுபடவில்லை.

 

படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள மகிமா, கொஞ்சம் நேரம் மட்டுமே தோன்றினாலும், குட்டி தேவதை என்று சொல்லும் அளவுக்கு அழகாக தோன்றி, ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறார்.

 

சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருந்தாலும், படம் மெல்லிசை போல அமைதியாக நகர்கிறது. படத்தின் ஆரம்பமே காதலை வைத்து தொடங்குவதால், ஸ்டார்ட்டிங்கே ரொம்ப ஸ்லோவாக இருக்க, பிறகு காயத்ரியை யாரோ பின் தொடர்வது போன்ற காட்சியை வைத்து படத்தை பரபரப்பாக நகர்த்தும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மீண்டும் திரைக்கதையை ரொம்ப அமைதியான முறையில் நகர்த்துகிறார்.

 

ஷாம் சி.எஸ்-ன் இசையில் திரில்லர் காட்சிகளின் போது மிரட்டும் பின்னணி இசை, காதல் காட்சிகளின் போது வருடிச் செல்கிறது. ஆனால், பாடல் தான் தேவையில்லாத இடத்தில் வந்து ஏற்கனவே கொட்டாய் விட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களை தூங்க வைத்து விடுகிறது.

 

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் அடுக்குமாடி குடியிருப்பின் பிரம்மாண்டமும், அதன் அமைதியான சூழலில் ஏற்படும் பயமும் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது.

 

விளையாட்டாக சமூக வலைதளங்களில் பரப்பும் புகைப்படமும், வீடியோ பதிவும், சிலரது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்துகிறது, என்ற சமூகத்திற்கு தேவையான மெசஜை இப்படத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர், யாரோ ஒருவருக்கு தானே ஏற்பட்டிருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு, இதே பிரச்சினை உங்களுக்கும் ஒரு நாள் வரலாம், அப்போது அதன் வலி தெரியும், என்பதை உணரவைத்துள்ளது. மொத்தத்தில் சமூக வலைதளங்களில் பிறருடைய புகைப்படத்தையோ, வீடியோவையோ அவர்களது அனுமதி இல்லாமல் ஏற்றுவது மட்டும் தவறல்ல, அதை பார்ப்பதும் தவறு தான் என்பதை அழகாக இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

 

அதிலும், ஒரு கட்டத்தில், தற்போது பரபரபரப்பாக பேசப்பட்டு வரும், தற்கொலைக்கு தூண்டும் இண்டர்நெட் கேமான ’புளே வேல்’விளையாட்டை ஞாபகப்படுத்துவது போன்ற ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சி தான் படத்தின் ஹைலைட்.

 

சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலே அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் பரபரப்பக இருப்பது போல தான் காட்சிகள் இருக்கும். ஆனால், இந்த படத்தை அப்படியில்லாமல் வித்தியாசமான முறையில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கையாண்டுள்ளார். ஆனால், அவரது இந்த வித்தியாசமான முயற்சியே படத்திற்கு சற்று பலவீனமாகவும் அமைந்திருப்பதுடன், காதலியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விஜய் சேதுபதியை கலங்கடிப்பது யார்? என்பதை விஜய் சேதுபதி வீட்டு பாத்ரூமில் காயத்ரி குளிக்கும் வீடியோ வெளியாகும் போதே சில ரசிகர்கள் யூகித்துவிடுகிறார்கள். இதை அறிந்தே இயக்குநர் ரசிகர்களின் கவனத்தை திசை திருப்ப ஒரு கதாபாத்திரத்தை படத்தில் சேர்த்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் திரைக்கதையில் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாதது, படத்தின் மற்றொரு பலவீனமாக உள்ளது.

 

மொத்தத்தில், சமூகத்திற்கு தேவையான ஒன்றை, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோவை வைத்து சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘புரியாத புதிர்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

ஜெ.சுகுமார்