Oct 14, 2025 05:17 AM

’ராஜா வீட்டு கன்னுக்குட்டி’ திரைப்பட விமர்சனம்

a7f2795d946b0595465a086e7a659d5c.jpg

Casting : Aadhik Silambarasan, Thambi Sivan, Gayathri Rema, Anu Krishna, Varshitha, Vijay TV Sarath, Manohar, Perumaththa

Directed By : AP Rajeev

Music By : Thalapathy Tyson Raj

Produced By : Sri RR Movies - Nagarathar Dr.Raja (A) Ramanathan

 

நாயகன் ஆதிக் சிலம்பரசன், காயத்ரி ரெமாவை காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக நாயகன் திடீரென்று சிங்கப்பூருக்கு போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், காயத்ரி ரெமாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விடுகிறது. மீண்டும் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நாயகனை, அவரது நண்பர் தம்பி சிவனின் தங்கை வர்ஷிதா காதலிக்க, இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. 

 

இதற்கிடையே, ஆதிக் சிலம்பரசன் மூலம் அவரது முன்னாள் காதலி காயத்ரி ரெமாவுக்கு ஒரு குழந்தை பிறந்த உண்மை தெரிய வருகிறது. இந்த உண்மையை தெரிந்துக் கொள்ளும் நாயகனின் மனைவி, வர்ஷிதா என்ன முடிவு எடுத்தார் ?, காதலியை கைவிட்ட குற்ற உணர்ச்சியில் வாழும் ஆதிக் சிலம்பரசன், தன் மூலம் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதை அறிந்து என்ன செய்தார் ? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதிக் சிலம்பரசன், கிராமத்து இளஞருக்கு ஏற்ற முகம். கபடி போட்டி மற்றும் சண்டைக்காட்சிகளில் அதிரடியாக நடித்திருப்பவர், காதல் காட்சிகளிலும், காதல் மூலம் தனக்கு ஏற்பட்ட வலியை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் தம்பி சிவன், இரண்டாவது நாயகனாக படம் முழுவதும் வலம் வருகிறார். நண்பனின் மனம் அறிந்து, அவர் செய்யும் அனைத்து விசயங்களும் அளப்பறியது. நண்பனின் இக்கட்டான காலக்கட்டங்களில் அவருடன் துணையாக இருந்து அவரை தேற்றுவதும், அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்வதும் என்று பார்வையாளர்கள் மனதில் அந்த கதாபாத்திரத்தை பதிய வைத்து விடுகிறார் தம்பி சிவன்.

 

ஆதிக் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, வர்ஷிதா மற்றும் தம்பி சிவனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனு கிருஷ்ணா என மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள். மூன்று பேரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

Raja Veettu Kannukkutty Review

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி சரத் மற்றும் அவரது நண்பர்கள் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. மனோகர் மற்றும் பெருமத்தா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

தளபதி டைசன் ராஜ் இசையில், “சிங்காரியே கனவு நெசந்தாண்டி...” மற்றும் “கற்கண்டு மழையே மழையே...” ஆகிய இரண்டு மெலொடி பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. “கூற சேலை தருவியா கிறுக்கா...” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஹரிகாந்த், கிராமத்து மனிதர்களையும், கதைக்களத்தையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஏ.பி.ராஜீவ், காதல் கதையை ஜாலியாகவும், சோகமாகவும் சொல்லியிருக்கிறார். 

 

உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காதலிக்கும் நாயகன், இறுதியில் அந்த காதலால் எப்படி நிலைகுலைந்து போகிறார், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஏ.பி.ராஜீவ், படத்தை கலர்புல்லாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி சென்றாலும், பல இடங்களில் சோகத்தையும் அதிகமாக பிழிந்திருக்கிறார்.

 

எதிர்பாராத திருப்பங்கள் மூலம் நாயகனின் காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லி திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ஏ.பி.ராஜீவ், இறுதியில் எதிர்பார்க்காத முடிவு மூலம் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.

 

மொத்தத்தில், ‘ராஜா வீட்டு கன்னுக்குட்டி’ திகட்டாத காதல்.

 

ரேட்டிங் 2.8/5