May 14, 2022 07:05 PM

’ரங்கா’ திரைப்பட விமர்சனம்

4da99df5de7268fd2803ab5bb2caee8e.jpg

Casting : Sibiraj, Nikila Vimal, Sathish, Manobala, Sara, Swaminathan, Renuka

Directed By : Vinod DL

Music By : Ramjeevan

Produced By : Vija K Chellaiah

 

ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர் சிபிராஜ். அந்த குறைபாட்டால் அவருடைய ஒரு கை அவருக்கு கட்டுப்படாமல் அவர் நினைப்பதற்கு எதிர்மறையாக இயங்கும். அதாவது, ஒருவருக்கு கை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவர் முகத்தில் கை குத்து விடும். இப்படிப்பட்ட ஒருவகை பாதிப்பில் இருந்து குணமாவது என்பது ரொம்ப சிரமம். ஆனால், இதற்கான தற்காலிக தீர்வு ஒன்று இருக்கிறது. அதாவது, நம் கை சும்மா இருக்கும் போது, ஸ்மைலிங் பந்தை கையில் வைத்துக்கொள்வது தான் அந்த தீர்வு.

 

சிபி ராஜும், அவ்வாரே எப்போதும் கையில் ஸ்மைலிங் பந்துடன் இருக்க, ஒரு நாள் பந்து இல்லாமல் இருக்கும் போது சிபி ராஜின் கை, நாயகி நிகிலா விமலின் கையை இருக பிடித்துக்கொள்கிறது. இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

 

தேனிலவுக்காக காஷ்மீர் போகும் தம்பதி மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா?, என்ன சிக்கல்?, சிபிராஜின் ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் பாதிப்பு அவருக்கு உதவியதா அல்ல உபரத்ரம் செய்ததா, என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘ரங்கா’.

 

ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்ற புதிய வகை நோய் பற்றி படத்தில் சொல்லும் போதே நாம் படத்துடன் ஒன்றிவிடுகிறோம். பிறகு அந்த பிரச்சனையால் சிபி ராஜ் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதன் மூலம் நிகிலாவுடனான அறிமுகம் பிறகு அவர்களுடைய காதல், திருமணம் அதை தொடர்ந்து வரும் மிகப்பெரிய பிரச்சனை என்று அனைத்தையும் நேர்த்தியாக சொல்வதோடு படு வேகமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோமால் தனது கையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சிறப்பான முக பாவங்களை வெளிப்படுத்தி நடித்திருக்கும் சிபி ராஜ், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

 

காதல் மற்றும் மனைவி என சிபிக்கு பொருத்தமான ஜோடியாக இருக்கும் நிகிலா விமல், காஷ்மீரில் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட போது, தப்பிப்போமா அல்லது இறப்போமா என்பது தெரியாமல், தனது கண்களில் பயத்தை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

 

சதீஷ், சாரா ஆகியோருடன் மனோ பாலா மற்றும் சுவமிநாதன் கூட்டணி இணைந்து செய்யும் காமெடிகள் சிரிக்க வைக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் மோனிஷ் ரகேஜா, மிரட்டலான நடிப்பின் மூலம் பயமுறுத்தியிருக்கிறார். 

 

அர்வியின் ஒளிப்பதிவு காஷ்மீரின் அழகை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, பனிமலைகளின் குளிர்ச்சியை அனுபவிக்கும் அனுபவத்தையும் கொடுக்கிறது.

 

ராம்ஜீவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். படத்தின் பரபரப்பை அதிகரிக்கும் விதத்தில் பின்னணி இசை அமைந்திருக்கிறது.

 

சுற்றுலா இடங்களில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆபத்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் வினோத் டி.எல், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லாத ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்ற விசயத்தை மிக சுவாரஸ்யமாகம் சொல்லியிருக்கிறார்.

 

ஆபத்தில் இருக்கும் போது சிபிராஜின் கை என்ன செய்யப்போகிறது, என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் அந்த கை சிபி ராஜுக்கு கட்டுப்படாமல் இருப்பதை திருப்புமுனையாக வைத்து காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. காஷ்மீரை காட்டிய விதம், காஷ்மீர் போல் போடப்பட்ட செட் உள்ளிட்டவை கூடுதல் கவனம் பெறுகிறது.

 

மொத்தத்தில், ‘ரங்கா’ ரசிக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 3/5