Oct 14, 2022 07:06 AM

'சஞ்ஜீவன்’ திரைப்பட விமர்சனம்

ee547d167740fc9855813aade05b876f.jpg

Casting : Vinod Logydass, Dhivya Duraisamy, Sathya Nj, Shivnishanth, Vimal Raja, Yaseen

Directed By : Mani Shekar

Music By : Tanuj Menon

Produced By : Malar Movie Makers

 

நாயகன் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். நாயகன் வினோத் லோகிதாஸ் ஸ்நூக்கர் விளையாட்டில் வெற்றி பெறுகிறார். அதனை கொண்டாடுவதற்காக நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா?, இல்லையா? என்பதை ஜாலியாகவும், பரபரப்பாகவும், சோகமாகவும் சொல்வது தான் ‘சஞ்ஜீவன்’.

 

நண்பர்களாக நடித்திருக்கும் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஐந்து பேரும் படம் முழுவதும் வருகிறார்கள். வினோத் லோகிதாஸுக்கு ஜோடி இருப்பதால் அவரை கதையின் நாயகன் என்று சொல்லலாம். இருந்தாலும், ஐந்து நடிகர்களும் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரங்களாக இருப்பதோடு, இயல்பாக நடித்து உண்மையான நண்பர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

 

வினோத் லோகிஸ்தாஸ் மிகவும் பொறுப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நண்பர்கள் தவறு செய்தால் திருத்துகிறார், காதலியிடம் கூட மிக அமைதியாக பேசுபவர், காதல் காட்சிகளில் கண்ணியமாக நடித்திருக்கிறார்.

 

பிரபல ஆடை வடிவமைப்பாளராக வலம் வரும் சத்யா என்.ஜே, நடிகராக ஜொலித்திருக்கிறார். காமெடியான தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்து நம்மை சிரிக்க வைக்கிறார்.

 

காதலிக்கும் பெண் எப்படிப்பட்டவள் என்று தெரியாமலேயே உருகி உருகி காதலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவ்நிஷாந்த், படம் முழுவதும் ஜாலியாக இருப்பதோடு, தனது நடிப்பால் கவனம் பெறுகிறார்.

 

முரட்டுத்தனமான குணம் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் யாஷின் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அதிலும், போதைப்பொருள் என்று நினைத்து அவர் வாங்கிய பொருளும், அதை வைத்துக்கொண்டு போலீஸில் சிக்குவதும் செம ரகளை.

 

தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையை கதைக்கு ஏற்றபடி அமைத்திருப்பவர், சில இடங்களில் இளையராஜாவின் இசையை பயன்படுத்தி கவனம் பெறுகிறார்.

 

ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஸ்வர்ணகுமார் நண்பர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார். கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்ட விதம் மிரட்டும் வகையில் இருக்கிறது. 

 

கதை எழுதி இயக்கியிருக்கும் மணி சேகர், நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை தொகுத்து திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

 

நண்பர்களின் வாழ்க்கையோடு, ஸ்நூக்கர் விளையாட்டையும் கதைக்களமாக்கி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஸ்நூக்கர் விளையாட்டு பற்றி ரசிகர்களுக்கும் புரிய வைத்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தனது வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார். 

 

ஐந்து நண்பர்களின் வாழ்க்கை மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டை மையப்படுத்திய திரைக்கதையில், திடீரென்று வரும் போதைப்பொருள் விவகாரம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த அடுத்த காட்சிகள் காமெடியாக முடிவது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. பிறகு நண்பர்களின் சுற்றுலா பயணத்தில் ஏற்படும் பிரச்சனையும் ஏதோ பெரிதாக இருக்கும் என்ற ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை இயக்குநர் முழுமையாக பூர்த்தி செய்யாமல் போவது படத்தின் பலவீனம்.

 

இருந்தாலும் இயக்குநர் தான் சொல்ல வந்த எளிமையான விஷயத்தை, ஒரு திரைப்படமாக முழுமையாகவே சொல்லியிருக்கிறார். அவருடைய கதைக்களம் மற்றும் காட்சிகள் எளிமையாக இருந்தாலும், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சீரியஸாக ஒரு விஷயத்தை செய்யும் போது அது காமெடியாக முடிவதும், அதே சமயம் விளையாட்டாக ஒரு விஷயத்தை செய்யும் போது அது எவ்வளவு பெரிய விபரீதத்தில் போய் முடிகிறது, என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘சஞ்ஜீவன்’ எதிர்பார்ப்பில்லாமல் வருபவர்களை ஏமாற்றாது.

 

ரேட்டிங் 3/5