’சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் விமர்சனம்

Casting : Saravanan, Namritha, Aroul D Shankar, Shanmugham, Thiruselvam, Vijayashree, Iniya Ram
Directed By : Balaji Selvaraj
Music By : Vibin Baskar
Produced By : 18 Creators - Sasikala Prabhakaran
சாதாரண நோட்டரியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணி செய்து வரும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்கிறார். வழக்கு, வாதம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தின் வெளியே உட்கார்ந்திருக்கும் தன்னிடம் உதவியாளராக சேருவது சரியில்லை, என்று சரவணன் நிராகரிக்கிறார்.
கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழக்கிறார். அவருக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்ற முடிவுக்கு வரும் சரவணன், அந்த சம்பவம் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர்கிறார். அதன்படி, தீக்குளித்து உயிரிழந்தவரின் மகள் கடத்தப்பட்டிருப்பதையும், அது பற்றிய புகாரை சம்மந்தப்பட்ட காவல் நிலையம் ஏற்க மறுத்த தகவலையும் சரவணன் நீதிமன்றத்தில் தெரிவித்து, பொதுநலன் வழக்கை ஹேபியஸ் கார்பஸ் வழக்காக பதிவு செய்கிறார். சம்மந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள்.
காவல்துறை கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த பெண்ணை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் சரவணனுக்கு, அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போனதும், தீக்குளித்து உயிரிழந்த அவரது தந்தை நீண்ட நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வருகிறது. அப்படியானால் அவர் இப்போது மகள் கடத்தப்பட்டு விட்டார், என்று புகார் அளித்தது ஏன்? என்ற கேள்வியோடு அடுத்தடுத்த எப்பிசோட்கள் பல திருப்பங்களோடு பயணிக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு வழக்கை கையில் எடுத்த சரவணன் ஜெயித்தாரா?, காணாமல் போன பெண்ணின் நிலை என்ன? என்பது மீதிக்கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு அங்கி போட்டு, நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், அளவான நடிப்பு, இயல்பான உடல் மொழி மூலம் சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞர் வேடத்தை மிக கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார் நடிகர் சரவணன்.
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற வழக்கு விசாரணை என முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதை பல்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி அனைத்து எப்பிசோட்களையும் சலிப்பின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார்.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் அளவாக கையாண்டிருக்கிறார். சாதாரண வழக்கறிஞராக சித்தரிக்கப்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தையும் தனது பீஜியம் மூலம் பல இடங்களில் மாஸாக காட்டியிருக்கிறார்.
திரைப்படங்களின் திரைக்கதை வேகமாக இருக்கும், ஆனால் முதல் முறையாக இணையத் தொடரின் திரைக்கதை படு வேமமாக பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராவணன். ஏழு எப்பிசோட்கள் எப்படி முடிந்தது, என்று தெரியாத அளவுக்கு படுவேகமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ்-ன் கதையில், ஏற்கனவே வெளியான சில நீதிமன்ற கதையம்சம் கொண்ட படங்களின் சாயல் தெரிந்தாலும், திரைக்கதை மற்றும் திருப்பங்கள் மூலம் அதை வேறு ஒரு பாணியில் சுவாரஸ்யமாகவே நகர்த்தி சென்றிருக்கிறார்.
தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், கடத்தப்பட்ட பெண், பிறகு 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி என திடீர் திருப்பம் மூலம் தொடரை வேறு பக்கம் பயணிக்க வைப்பவர், மீண்டும் அதே பெண் யார்? என்ற கேள்வியை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி, அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டி, அவளுக்கு என்ன நடந்திருக்கும், என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, 7 எப்பிசோட்களையும் கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும்’ சுவாரஸ்யம்.
ரேட்டிங் 3/5