Jan 13, 2018 10:03 AM

’ஸ்கெட்ச்’ விமர்சனம்

008dd68c279f54a60cbad15c66972278.jpg

Casting : Viikram, Tamanna, RK Suresh

Directed By : Vijay Chandar

Music By : SS Thaman

Produced By : Kalaipuli S Thanu, Moving Frames

 

விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’

 

தவனை முறையில் வாகனங்களை வாங்கிவிட்டு சரியாக பணம் கட்டாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்க்கும் விக்ரம், தனது முதலாளிக்காக பெரிய ரவுடி ஒருவரிடம் இருந்து கார் ஒன்றை பறிமுதல் செய்யும் வேலையில் இறங்குகிறார். அதே சமயம், அந்த காரில் போதை மருந்தை ரவுடி கடத்தி செல்ல, அந்த நேரத்தில் அந்த காரை அவரிடம் இருந்து தூக்கும் விக்ரம் போலீஸிடம் ஒப்படைத்துவிடுகிறார். இதனால் கடுப்பாகும் ரவுடி ஸ்கெட்ச் போட்டு வாகனங்களை தூக்கும் விக்ரம் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஸ்கெட்ச் போடுகிறார். அதே சமயம், விக்ரமின் ஆட்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்பட்ட, இதை செய்வது ரவுடி தான் என்று அவரை தூக்க விக்ரம் ஸ்கெட்ச் போட, இந்த கொலைகளை செய்வது வேறு ஒருவர் என்பது தெரிய வருகிறது, அவர் யார், எதற்காக விக்ரம் அண்ட் குரூப்பை கொலை செய்கிறார், என்பது தான் ‘ஸ்கெட்ச்’ படத்தின் கதை.

 

கெட்டப் மாற்றுவது, உடம்பை வறுத்திக் கொள்வது என்று படத்திற்கு படம் புதிய முயற்சியில் ஈடுபடும் விக்ரம், இந்த படத்தில் ரொம்ப சாதாரணமாக தோன்றினாலும், நடிப்பில் பெரிய வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், வில்லன்களிடம் வசனம் பேசும் இடங்களிலும் மாஸ் காட்டியிருக்கும் விக்ரம், அதே சமயம் ரொம்ப அடக்கி வாசித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சேது படத்தை நினைவுப்படுத்தினாலும், அவரது முகம் முதிர்ச்சியை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

 

ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருக்கும் தமன்னா, மாமியாக பெரிய அளவில் பர்பாமன்ஸ் செய்யவில்லை என்றாலும், தனது பளபளப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார்.

 

குறைவான காட்சிகளில் வரும் சூரி, குறைவாக சிரிக்க வைத்தாலும், விக்ரமின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கும் வினோத் தனது வசனங்கள் மூலம் திரையரங்கமே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறார்.

 

ஆர்.கே.சுரேஷ், போலீஸ் கமிஷ்னர் ஆகியோரை பெரிய பில்டப்போடு காட்டினாலும் அவர்களது வேடம் எடுபடாமல் போகிறது. ராயபுரம் குமார் என்ற வேடத்தில் பாபு ராஜா தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டுகிறார்.

 

எஸ்.எஸ்.தமனின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருந்தாலும், பாடல்கள் திரைக்கதைக்கு வேகத்தடையாக அமைந்துள்ளது. சுகுமாரின் ஒளிப்பதிவு ராயபுரத்த்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

 

வேகமாக நகரும் திரைக்கதைக்கு பாடல் காட்சிகள் வேகத்தடையாக இருந்தாலும், நச்சென்று இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக ராயபுரம் ரவுடிக்கு விக்ரம் ஸ்கெட்ச் போட்டு அதை செயல்படுத்தும் காட்சி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறது. 

 

வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே ”ஏய்...டேய்...” என்று கத்துவதும், வெட்டுவதும் குத்துவதும் என்று தான் இருக்கும் என்ற விதிமுறையை மாற்றி, மாஸ் படத்தை ஸ்டைலிஷாக பிரஷண்ட் செய்திருக்கும் இயக்குநர் விஜய்சந்தர், ட்விஸ்ட் மூலம் திரைக்கதையை பரபரப்பாக நகர்த்தியிருப்பதோடு நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார்.

 

க்ளாஷ் ஹீரோவான விக்ரமையும் மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி காட்சிகளை ஷாட் அண்ட் ஸ்வீட்டாக வைத்திருக்கும் இயக்குநர் சில பாடல்களை தவிர்த்திருக்கலாம்.

 

ரெகுலர் ஆக்‌ஷன் மசாலா படத்திற்கான கரு தான் கதை என்றாலும், அதற்கு இயக்குநர் விஜய்சந்தர் அமைத்திருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விக்ரமின் நண்பர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படும் போது, கொலைகளை செய்வது இவராகத்தான் இருக்கும், என்று ரசிகர்கள் யூகிக்க, அங்கே இயக்குநர் வைத்த ட்விஸ்ட்டால், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொள்கிறது.

 

மொத்தத்தில், ’ஜெமினி’ படத்திற்கு பிறகு விக்ரமை மாஸ் ஹீரோவாக ரசிகர்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது இந்த ‘ஸ்கெட்ச்’.

 

ஜெ.சுகுமார்