‘வேடுவன்’ இணையத் தொடர் விமர்சனம்

Casting : Kanna Ravi, Sanjeev Venkat, Sravnitha Srikanth, Vinusha Devi, Rekha Nair, Lavanya
Directed By : Pavan Kumar
Music By : Vibin Baskar
Produced By : Rise East Productions - Sagar Pentela
பிரபல நடிகரான கண்ணா ரவி, தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அதீத ஈடுபாடு காட்டி நடிக்க கூடியவர். இதற்கிடையே உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஒருவர் அவரிடம் கதை சொல்கிறார். கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸாக பயணித்து முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது. அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வலம் வருவதையும் கண்ணா ரவி அறிந்துக் கொள்கிறார்.
ஆனால், தனது மேலதிகாரி தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி, திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? , சினிமா கதையாக இருந்தாலும், இந்த சம்பவம் கண்ணா ரவியை எந்த வகையில் பாதித்தது, அதனால் என்ன நடந்தது ? என்பதை அடுத்தடுத்த எப்பிசோட்கள் மூலம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘வேடுவன்’.
நடிகர் என்பதால் பலவித வேடங்கள் போட கூடிய வாய்ப்பு இந்த தொடரில் கண்ணா ரவிக்கு கிடைத்திருக்கிறது. போலீஸ், பிச்சைக்காரர், சமையல்காரர் உள்ளிட்ட அனைத்து கெட்டப்புகளிலும் கச்சிதமாக தன்னை பொறுத்திக்கொள்ளும் கண்ணா ரவி, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். கடமையா ? அல்லது மனசாட்சியா ? என்று குழம்பும் இடத்தில் தனது தடுமாற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், காதலை வெளிப்படுத்தும் இடத்திலும் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஆதிநாதன் என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் சஞ்சீவ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரம் என்றாலும் தனது அளவான நடிப்பு மூலம் தன் கதாபாத்திரம் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா என பெண் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து கவர்கிறார்கள்.
ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னனி இசை மற்றும் சூரஜ் கவியின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி தொடருக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பவன் குமார், வித்தியாசமான கதை சொல்லல் மூலம் புதுவிதமான ஆக்ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை கொடுத்திருக்கிறார்.
திரைப்பட நடிகர் என்ற கருவை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை கொடுத்திருக்கும் இயக்குநர் பவன் குமார், காட்சிகளை கையாளும் விதத்தை மட்டும் தொலைக்காட்சி தொடர் போல் கையாண்டிருப்பது சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், நட்சத்திரங்களின் நடிப்பு மற்றும் திருப்பங்கள் மூலம் அந்த பலவீனம் மறக்கடிக்கப்பட்டு, தொடருக்கு பாஸ் மார்க் போட வைத்துவிடுகிறது.
மொத்தத்தில், ‘வேடுவன்’ இணையத் தொடர் விரும்பிகளுக்கான வேட்டை.
ரேட்டிங் 3.5/5